விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது - கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேட்டி


விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது - கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 15 Aug 2019 10:00 PM GMT (Updated: 15 Aug 2019 9:03 PM GMT)

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 3 நாள் மாநில மாநாடு தூத்துக்குடியில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று மாலையில், தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தேசிய செயலாளர் டி.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட 370 சட்டப்பிரிவு அகற்றப்பட்டது. இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் படி அந்த மாநில மக்களின் கருத்துகளை கேட்காமல் எடுக்கப்பட்ட இந்த செயல் மத்திய அரசு செய்திருக்கும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும். இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மத்திய அரசு, காஷ்மீர் மாநிலத்திற்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

பாராளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையில் விவசாயம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தமிழர்களின் நலனை காப்பாற்ற முடியாத அரசாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story