திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை தென்றல் நகர் மாரியம்மன் கோவில் பகுதியில் 9-வது தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் நாவல்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மகாஸ்ரீ (10), ஜெயஸ்ரீ (7) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவரும் திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உறவினர் வீட்டு காதுகுத்து விழாவுக்காக ஏழுமலை குடும்பத்துடன் நேற்று முன்தினம் திருப்பதிக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அந்த வீட்டின் வழியே சென்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஏழுமலையின் குடும்ப நண்பரான செந்தில்குமாரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு உடனடியாக வந்தார். ஏழுமலைக்கும், திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணி உள்பட பொருட்கள் அனைத்தும் அறை முழுவதும் சிதறிக்கிடந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் இரவில் வீட்டுக்குள் புகுந்து திருடி சென்றுள்ளனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வீட்டில் 40 பவுன் நகைகள் மற்றும் ஏழுமலை குழந்தைகளின் பள்ளி கட்டணத்துக்காக வைத்திருந்த ரூ.2 லட்சத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
பின்னர் தடய அறிவியல் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி மற்றும் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டை பார்வையிட்டு, மர்மநபர்களின் கை ரேகைகள் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபர்களையும் தேடி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story