நாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: ரூ.2.15 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


நாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: ரூ.2.15 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 16 Aug 2019 4:30 AM IST (Updated: 16 Aug 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தையொட்டி நாமக்கல்லில் தேசியகொடியை ஏற்றி வைத்து, 429 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

நாமக்கல்,

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், சரியாக காலை 9.05 மணிக்கு தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் கலெக்டர் ஆசியா மரியம், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் வானில் பறக்கவிட்டனர்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் விழாவில் பங்கேற்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளை கலெக்டர் ஆசியா மரியம் சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 139 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பின்னர் வருவாய்த்துறையின் சார்பில் 468 பயனாளிகளுக்கு ரூ.44 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் உள்பட மொத்தம் 429 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 15 லட்சத்து 41 ஆயிரத்து 710 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகள்

இதையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. இதில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்பெக்ட்ரம் லைப் அகாடமி பள்ளி, மோகனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, என்.புதுப்பட்டி தி மாடர்ன் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ராயர்பாளையம் ரங்கா வித்யாலயம் பள்ளி, கந்தம்பாளையம் எஸ்.கே.வி.வித்யாஸ்ரம் பள்ளி என 8 பள்ளிகளை சேர்ந்த 836 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இதேபோல் காவல்துறையின் துப்பறியும் மோப்பநாய்கள் சீமா, பவானி, பொய்கை ஆகியவற்றின் சாகச நிகழ்ச்சியும் நடந்தது. இதை பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கண்டு ரசித்தனர்.

நிறைவாக சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பள்ளிகளுக்கு சுழற்கேடயமும், குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

விழாவில் மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் மலர்விழி, முதன்மை கல்வி அதிகாரி உஷா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், நாமக்கல் தாசில்தார் பச்சைமுத்து உள்பட அரசுதுறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள், பயனாளிகள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story