ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை


ஊத்துக்கோட்டை அருகே குடிநீர்  வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 15 Aug 2019 10:45 PM GMT (Updated: 15 Aug 2019 10:45 PM GMT)

ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள நந்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுச்சேரியில் 300 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிராம எல்லையில் அமைத்துள்ள இரு ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு அனுப்பி வைத்து குடிநீர் வினியோகித்து வந்தனர். கோடை வெயில் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் 6 மாதங்களுக்கு முன்னர் ஆழ்துளை கிணறுகள் வற்றிவிட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

ஆகையால் 5 மாதங்களுக்கு முன் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. குறைந்த ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக புதிய ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் வரவில்லை. இதனால் கிராமத்தில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தன் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கினார். தற்போது அவரது கிணற்றில் இருந்து பெறப்படும் தண்ண்ீர் குழாய்கள் மூலமாக வினியோகிக்கப்படுகிறது. அந்த விவசாயி தன் விளைநிலத்தில் ஓரிரு நாட்களில் ஏர் உழுது நடவு செய்ய உள்ளார்.

இதனால் அவர் ஊராட்சி செயலாளரிடம் மாற்று வழி தேடி கொள்ளுமாறு நேற்று தெரிவித்தார். இதை தெரிந்துகொண்ட கிராம மக்கள் நேற்று நந்திமங்கலம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தமிழக அரசு தனி நபர் கழிவறை கட்ட ரூ.12 ஆயிரம் வழங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ் கிராமத்தில் உள்ள பலர் தம் சொந்த செலவில் தனிநபர் கழிவறைகள் கட்டி கொண்டனர். அரசிடமிருந்து இந்த தொகை கிடைக்க தலா ரூ.1000 கொடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மிரட்டி வருவதாகவும் கிராம மக்கள் குற்றம் சுமத்தினர். இதனை கண்டித்தும் பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story