திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா கொண்டாட்டம் - தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை


திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா கொண்டாட்டம் -  தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை
x
தினத்தந்தி 15 Aug 2019 11:00 PM GMT (Updated: 15 Aug 2019 10:56 PM GMT)

திருப்பூரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடந்தது. தேசிய கொடியேற்றி வைத்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா நேற்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. இதற்காக கல்லூரி மைதானத்தில் விழா மேடை மற்றும் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. காலை 9.05 மணிக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி முன்னிலை வகித்தார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் நடந்த காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பறக்கவிட்டனர். பின்னர் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுகள் 50 பேருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர்.

சிறப்பாக பணிபுரிந்த 84 அரசு அலுவலர்கள், 59 காவல்துறையினர், 10 தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மற்றும் 1 சமூக ஆர்வலர் என மொத்தம் 154 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தாட்கோ, வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி மூலமாக மொத்தம் 221 பேருக்கு ரூ.56 லட்சத்து 52 ஆயிரத்து 139 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து 9 பள்ளிகளை சேர்ந்த 886 மாணவ-மாணவிகள் பங்கேற்று நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சி செய்து காட்டி மாணவர்கள் அசத்தினார்கள். கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிகளுக்கு கேடயம் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் மோப்பநாய்கள் டெவில், புல்லட், அர்ஜூன், வெற்றி, கண்டர் ஆகியவை வெடிகுண்டு கண்டறிவது, தொலைந்து போன பொருளை நேர்த்தியாக கண்டுபிடிப்பது, நெருப்பு வளையத்துக்குள் தாண்டுவது, கலெக்டருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பது என சிறப்பாக சாகசம் செய்து பார்வையாளர்களை அசத்தின. விழா நிகழ்ச்சியை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், வீரபாண்டி அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி, அய்யங்காளிபாளையம் அரசு பள்ளி ஆசிரியர் சண்முகசுந்தரம் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

விழா நடந்த கல்லூரி மைதானத்தில் முதியவர் ஒருவர் காந்தி வேடமிட்டும், ஒருவர் நேரு வேடமிட்டும் வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். அதுபோல் மரக்கிளையுடன் வந்து மரம் வளர்ப்பு குறித்து ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழாவில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், துணை கமிஷனர்கள் பிரபாகரன், உமா, மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) ரமேஷ்குமார், தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், ஆர்.டி.ஓ.க்கள் செண்பகவல்லி (திருப்பூர்), இந்திரவல்லி (உடுமலை), மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் விமல்குமார் உள்ளிட்டவர் கள் கலந்து கொண்டனர். 

Next Story