கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாத அதிகாரியை கண்டித்து, வாயில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்


கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாத அதிகாரியை கண்டித்து, வாயில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 Aug 2019 10:45 PM GMT (Updated: 15 Aug 2019 11:54 PM GMT)

டி.என்.பாளையம் அருகே கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாத அதிகாரியை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டி.என்.பாளையம், 

சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது.

அதன்படி டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சியில் பழைய பள்ளிக்கூட கட்டிடத்தில் நேற்று பகல் 11 மணிக்கு கிராம சபை கூட்டம் தொடங்கியது.

கூட்டத்துக்கு ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கேசவராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். அந்த கோரிக்கை மனுக்களில் சிலவற்றை தீர்மான புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதனால் டி.என்.பாளையம் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கேசவராஜன், பொதுமக்கள் கொடுத்த மனுக்களை அப்படியே வைத்துவிட்டு, எந்தவித தீர்மானத்தையும் நிறைவேற்றாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதன்காரணமாக பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து, தீர்மானம் நிறைவேற்றாத அதிகாரியை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கூட்டம் நடந்த பழைய பள்ளிக்கூட கட்டிடத்தில் உள்ளிருப்பு போராட்டத்தையும் தொடங்கினர்.

இதுபற்றி அறிந்ததும் டி.என்.பாளையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி பஷீர் அகமது, பங்காளப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘கொங்கர்பாளையம் ஊராட்சியில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்து உள்ளது. 100 நாட்கள் வேலை திட்டத்தில் பணிக்கே வராதவர்கள் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக பணித்தள பொறுப்பாளர்கள் 3 பேர் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். அவர்களை மாற்றக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இன்று நடந்த கூட்டத்தில் (அதாவது நேற்று) எந்தவித தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. முறையாக கூட்டம் நடக்காததால் மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், ‘இதுகுறித்து மனு எழுதி கொடுங்கள். மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மாலை 5 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாத அதிகாரியை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி, அங்குள்ள பள்ளிக்கூட கட்டிடத்தில் 6 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story