மாவட்டத்தில் 100 ஏரிகள் தூர்வாரப்படுகிறது - கலெக்டர் பிரபாகர் தகவல்


மாவட்டத்தில் 100 ஏரிகள் தூர்வாரப்படுகிறது - கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 17 Aug 2019 3:30 AM IST (Updated: 16 Aug 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 ஏரிகள் தூர்வாரப்படுகிறது என கலெக்டர் பிரபாகர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஒன்றியம் நாரலப்பள்ளி ஊராட்சியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட வீரப்பன் ஏரி ரூ. 5 லட்சம் மதிப்பில் ஊரக பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் திட்டத்தின்கீழ் தூர்வாரும் பணியை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார். பின்னர் இது குறித்து அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ஏரிகள், குளங்கள் மற்றும் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல் ஊரக பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை எதிர்நோக்கி உள்ள நிலையில் நீர் நிலைகளில் மழை நீரை சேமிக்கும் பொருட்டு, அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் மூலம் மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தூர்வாரும் பணிகளும், மாவட்ட நிர்வாகம் சார்பில் 10 ஒன்றியத்தில் தலா 10 ஏரிகள் என 100 ஏரிகள் தூர் வாரப்படுகிறது.

இப்பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டு ஏரி கரைகள் உயர்த்தியும், தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அதிக அளவில் மழை நீரை சேமிக்கவும், குளம் குட்டைகள் மற்றும் ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது என்றார். பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் நீர் நிலைகள் தூர்வாரும் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், விவசாயிகளிடையே மழை நீர் சேகரிப்பு மற்றும் பண்ணை குட்டைகள் ஏற்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். ஊரக பகுதிகளில் பயன்படாமல் உள்ள கிணறுகளை தூர்வார அனுமதி வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவா, பிரசன்னவெங்கடேசன், ஒன்றிய பொறியாளர் ஆசைத்தம்பி, பணி மேற்பார்வையாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story