வேலூரில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்: 4 மணி நேரம் கடைகள் மூடப்பட்டதால் மதுபிரியர்கள் ஏமாற்றம்
டாஸ்மாக் விற்பனையாளர் கொலையை கண்டித்து வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 மணி நேரம் கடைகள் மூடப்பட்டதால் மதுபிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வேலூர்,
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள காவேரி நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 43). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகேயுள்ள பேட்டப்பனூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 14-ந் தேதி இரவு டாஸ்மாக் கடையில் தனியாக இருந்த ராஜாவை மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, அங்கிருந்த மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
டாஸ்மாக் கடை விற்பனையாளர் ராஜாவின் கொலையை கண்டித்து வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று காலை வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், டாஸ்மாக் கடையில் வசூலாகும் பணத்தை நிர்வாகமே நேரில் வந்து வாங்கி செல்ல வேண்டும், கொலை செய்யப்பட்ட ராஜாவின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் வேலூர் மாவட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் கடை ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வேலூர் டாஸ்மாக் மாவட்டத்தில் உள்ள 105 கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனை அறியாத மதுபிரியர்கள் பலர் வழக்கம்போல் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கும் என்று அதன் முன்பு காத்திருந்தனர். ஆனால் நேரம் கடந்த பின்னரும் கடை திறக்கவில்லை.
டாஸ்மாக் கடை ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் குறித்து தகவலறிந்த மதுபிரியர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றனர். இதற்கிடையே டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளான ராஜாவின் குடும்பத்துக்கு நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது ஆகியவை ஏற்கப்பட்டதன் காரணமாக மாலை 4 மணியளவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story