டாஸ்மாக் ஊழியரை கொன்று பணம் கொள்ளை: கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு


டாஸ்மாக் ஊழியரை கொன்று பணம் கொள்ளை: கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 17 Aug 2019 5:00 AM IST (Updated: 17 Aug 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் ஊழியரை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பழைய குற்றவாளிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ளது நெடுஞ்சாலை. இந்த ஊரின் அருகே பேட்டப்பனூரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ராஜா (வயது 43) என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 14-ந் தேதி இரவு கடையை மூடும் நேரத்தில் மர்ம நபர்கள் கடைக்கு வந்து ராஜாவை கத்தியால் குத்திக் கொலை செய்தனர். மேலும் கடையில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொலை தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இக்கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டுள்ளார். அவருடைய உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார் (கிருஷ்ணகிரி தாலுகா), கணேஷ்குமார் (மகராஜகடை) ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தனிப்படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். டாஸ்மாக் ஊழியர் ராஜா கொலை தொடர்பாக குருபரப்பள்ளி சுற்று வட்டாரத்தை சேர்ந்த பழைய குற்றவாளிகள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், டாஸ்மாக் கடை உள்ள பகுதியில் எங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? எனவும், அதில் சந்தேகத்திற்கு உரிய நபர்கள் யாரேனும் பதிவாகி உள்ளார்களா? என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story