திருத்தணியில் வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை பட்டப்பகலில் பயங்கரம்


திருத்தணியில் வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை பட்டப்பகலில் பயங்கரம்
x
தினத்தந்தி 17 Aug 2019 3:30 AM IST (Updated: 17 Aug 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணியில் வாலிபர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருத்தணி,

திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு நேற்று மதியம் 2½ மணியளவில் வாலிபர் ஒருவர் அலறியபடி ஓடி வந்தார். அவரை 25 வயது மதிக்கத்தக்க 5 பேர் கொண்ட கும்பல் தங்கள் கைகளில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் துரத்தியப்படி வந்து சரமாரியாக தலையில் வெட்டியது.

இதில் அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே கீழே சாய்ந்தார். ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர்.

பின்பு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் பெயர் மகேஷ் (வயது 30) என்பதும், அவர் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

அந்த நபர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்பதை பற்றி திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்கானிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story