ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைப்பு


ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 16 Aug 2019 10:30 PM GMT (Updated: 16 Aug 2019 8:43 PM GMT)

ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. அத்துடன் டாஸ்மாக் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல், 

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக இருந்த ராஜா (வயது 43) என்பவர், மர்ம நபர்களால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.

அத்துடன் டாஸ்மாக் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் முள்ளிப்பாடி கூடுதல் மதுபான கிடங்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமு தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. சங்க மாவட்ட தலைவர் சிறப்புரையாற்றினார். எல்.பி.எப். சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். அப்போது கிருஷ்ணகிரி அருகே, படுகொலை செய்யப்பட்ட ராஜாவின் குடும்பத்துக்கு அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் அனைவரும் ஊழியர் படுகொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். மேலும் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story