உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை, தேனி அ.தி.மு.க. அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
உரிமை கொண்டாடுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தொடர்ந்து தேனி அ.தி.மு.க. அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேனி,
தேனி அருகே பழனிசெட்டிபட்டி ஆர்.எம்.டி.சி. காலனியில் அ.தி.மு.க. மாவட்ட தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளைக்கு சொந்தமானதாகவும், ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் பெயரில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த கட்சி அலுவலக கட்டிடத்தை உரிமை கொண்டாடுவதில் அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைப்பு விழா நடந்தது. அதே நேரத்தில் பூங்குன்றன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்ததால் இந்த அலுவலகம் அ.ம.மு.க. கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
இதற்கிடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினர் கொடுத்த புகாரின்பேரில் இருதரப்பினர் மீதும் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
தினமும், சுழற்சி முறையில் பணியில் இருக்கும் வகையில் 3 போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கட்சி அலுவலக கட்டிடத்தை உரிமம் கொண்டாடுவது தொடர்பாக அ.தி.மு.க., அ.ம.மு.க. நிர்வாகிகளுடன் பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரிதா தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் இருகட்சியினரும் தங்கள் தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து மறுதேதி குறிப்பிடாமல் பேச்சுவார்த்தை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம், அ.ம.மு.க. நிர்வாகிகள், இந்த அலுவலகத்துக்குள் நுழைய முயற்சிக்கும் அ.தி. மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் மனு அளித்தனர். இதையடுத்து இந்த அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதன்படி கூடுதலாக 3 போலீசார் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் போலீசார் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், போலீஸ் அதிகாரிகளும் இங்கு அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story