ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு, பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் போலீசார் நூதன தண்டனை


ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு, பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் போலீசார் நூதன தண்டனை
x
தினத்தந்தி 17 Aug 2019 4:15 AM IST (Updated: 17 Aug 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் போலீசார் நூதன தண்டனை வழங்கினர். அத்துடன் அவர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஊர்வலம் நடத்துவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குவது என பல்வேறு நடவடிக்கைகளை திண்டுக்கல் போக்குவரத்து போலீசார் எடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகில் நடந்தது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்குமார் முன்னிலை வகித்தார். அதையடுத்து பண்ணை மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று சாலை விதிமுறைகள், ஹெல்மெட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர்.

ஊர்வலத்தில் பண்ணை மெட்ரிக் பள்ளி முதல்வர் வேணுகோபால், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர். அதையடுத்து பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட மாதிரி ஹெல்மெட்டுகளை மாணவ-மாணவிகள் மூலம் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்தவர்களுக்கு அணிவித்து நூதன தண்டனை வழங்கினர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், மாணவ-மாணவிகள் மூலம் மாதிரி ஹெல்மெட்டுகளை அணிவித்தால், அது அவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

சாலை விதிமுறைகளை கடைபிடித்து வாகனம் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். எனவே அடுத்து அவர்கள் எப்போது வாகனம் ஓட்டினாலும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவார்கள். அபராதம் விதிப்பதால் மட்டும் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படாது. இதுபோன்ற நூதன தண்டனைகள் மூலம் தான் அவர்களிடம் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்றனர்.

Next Story