தரம் குறைந்த காய்கறிகளை விற்பனை செய்வதாக கூறி, சரக்கு ஆட்டோவை சிறைபிடித்து வியாபாரிகள் போராட்டம்
தரம் குறைந்த காய்கறிகளை விற்பனை செய்வதாக கூறி சரக்கு ஆட்டோவை சிறைபிடித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் உள்ள காய்கறி மண்டிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மண்டிகளில் இருந்து காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்து, சில்லறை வியாபாரிகள் தங்களது கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். கோத்தகிரி மார்க்கெட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் உள்ளனர்.
இதற்கிடையில் சமவெளி பகுதிகளில் இருந்து தரம் குறைந்த காய்கறிகளை சிலர் சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து, கோத்தகிரி நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் விலை குறைவாக விற்பனை செய்து வருகின்றனர். மேலும் தடை செய்யப்பட்டு உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக குன்னூர் உதவி கலெக்டர், தாசில்தார் ஆகியோருக்கு கோத்தகிரி வியாபாரிகள் புகார் மனுக்களை அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை சமவெளி பகுதியில் இருந்து சரக்கு ஆட்டோவில் தரம் குறைந்த காய்கறிகளை சிலர் கொண்டு வந்து கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் விற்பனை செய்து வந்தனர். இதை கண்டு ஆவேசம் அடைந்த கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் 30-க்கும் மேற்பட்டோர் அந்த சரக்கு ஆட்டோவை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தரம் குறைந்த காய்கறிகளை விற்பனை செய்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் கோத்தகிரி போலீஸ் ஏட்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் போலீசாரிடம் கூறியதாவது:-
நாங்கள் கோத்தகிரி மார்க்கெட்டில் கடை வைத்து லைசென்சு எடுத்து வாடகை கட்டணம், மின்சார கட்டணம், தொழில் வரி, குப்பை வரி, உள்ளிட்டவைகளை செலுத்தி வருகிறோம். ஆனால் எந்தவித அனுமதியும் இன்றி சமவெளி பகுதிகளில் இருந்து தரமற்ற காய்கறிகளை குறைந்த விலைக்கு வாங்கி சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து, கோத்தகிரி பகுதியில் விற்பனை செய்து விட்டு செல்கின்றனர். மேலும் அதிக பாரம் ஏற்றி வருவதால் விபத்து நிகழ்கிறது. இதனால் எங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதுடன், கோத்தகிரி பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் முறையாக செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் காய்கறிகளை வாடிக்கையாளர்களிடம் வழங்கி வருகின்றனர். இங்கு கடையில் ஒரு பிளாஸ்டிக் பை இருந்தால், ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து சரக்கு ஆட்டோவில் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வதும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதும் தவறு. இனிமேல் அனுமதியின்றி காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சரக்கு ஆட்டோவில் வந்தவர்களை போலீசார் எச்சரித்தனர். பின்னர் வியாபாரிகள் சரக்கு ஆட்டோவை விடுவித்தனர். இதைத்தொடர்ந்து கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு சமவெளி பகுதிகளில் இருந்து அனுமதியின்றி தரம் குறைந்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Related Tags :
Next Story