பணி பாதுகாப்பு வழங்கக்கோரி, டாஸ்மாக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்


பணி பாதுகாப்பு வழங்கக்கோரி, டாஸ்மாக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2019 11:00 PM GMT (Updated: 16 Aug 2019 9:40 PM GMT)

பணி பாதுகாப்பு வழங்கக்கோரி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

கிருஷ்ணகிரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைக்குள் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த விற்பனையாளர் ராஜாவை வெட்டி படுகொலை செய்து ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும், பாதிக்கப்பட்ட ராஜாவின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு மற்றும் அவரது வாரிசுக்கு அரசு வேலை வழங்கக்கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 228 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பணியாற்றி வரும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் என 951 பேர் நேற்று டாஸ்மாக் கடைகளை அடைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழ்நாடு அரசு அனைத்து டாஸ்மாக் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்தபடி விழுப்புரத்தில் உள்ள அரசு சேமிப்பு கிடங்குக்கு சென்று அங்குள்ள வளாகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அரசு சேமிப்பு கிடங்கின் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினர். இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து போராட்டக்குழுவினர் கூறும்போது, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது இல்லை. எனவே தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைத்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.

மாவட்டத்தில் வழக்கமாக ஒரு நாளைக்கு ரூ.2 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். சுதந்திர தினத்தன்று கடைகள் திறக்கப்படாத நிலையில் இன்று (நேற்று) வழக்கத்தை விட அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகும்.

ஆனால் எங்களுடைய இந்த போராட்டம் காரணமாக விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என்றனர். இந்த போராட்டம் காரணமாக நேற்று பிற்பகல் 3 மணி வரை குடிப்பிரியர்கள், கடைகளுக்கு சென்று மது வாங்க முடியாமல் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட ராஜாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், அவரது மனைவிக்கு அங்கன்வாடி மையத்தில் பணி வழங்குவதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து பிற்பகல் 3 மணிக்கு மேல் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்பினர். 

Next Story