ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியாக உயர்ந்தது


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியாக உயர்ந்தது
x
தினத்தந்தி 17 Aug 2019 4:30 AM IST (Updated: 17 Aug 2019 4:48 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியாக உயர்ந்தது.

மேட்டூர், 

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு வெகுவாக குறைந்தது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. ஒகேனக்கல்லுக்கு காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே மேட்டூர் அணை நிரம்பி வருவதால் அதன் நீர்த்தேக்கப்பகுதிகளிலும், ஒகேனக்கல் மெயின் அருவி வரையும் தண்ணீர் தேங்கியது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நேற்று 9-வது நாளாக நீடித்தது.

ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்தனர். இதனிடையே காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தண்ணீரில் அடித்து வரப்பட்ட மரங்கள், குப்பை கழிவுகள் அகற்றும் பணியில் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதனிடையே மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 111.16 அடியாக இருந்தது. நேற்று மாலை 112 அடியாக உயர்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகமாக இருந்ததால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. ஆனால் தற்போது நீர்வரத்து மிகவும் குறைந்து விட்டதால், நீர்மட்டம் படிப்படியாக தான் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அணை நிரம்புமா? என்று கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

Next Story