விராஜ்பேட்டையில் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள விரிசலால் நிலச்சரிவு பீதி-மக்கள் வெளியேற்றம்


விராஜ்பேட்டையில் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள விரிசலால் நிலச்சரிவு பீதி-மக்கள் வெளியேற்றம்
x
தினத்தந்தி 16 Aug 2019 11:22 PM GMT (Updated: 16 Aug 2019 11:22 PM GMT)

விராஜ்பேட்டையில் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள விரிசலால் நிலச்சரிவு பீதி நிலவி வருகிறது. இதனால் அந்தப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குடகு,

கர்நாடகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. இதன்காரணமாக மாநிலத்தில் தென், வட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. வடகர்நாடகத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தன. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் குடகு மாவட்டத்தில் மழை வெள்ளம், நிலச்சரிவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 6 பேரின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளை இழந்து ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

குடகு மாவட்டத்தில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள், தீயணைப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். காவிரி ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிராமங்களில் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசித்து வந்த சுமார் 4 ஆயிரம் மக்களையும், ஆடு, மாடுகள், கோழிகளையும் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். இந்த மழை வெள்ளத்தால் காபி தோட்டங்கள் உள்ளிட்ட பயிர்கள் மூழ்கி நாசமாகின.

தற்போது மழை நின்றுள்ளதால் குடகு மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. இந்த நிலையில், விராஜ்பேட்டை டவுன் நேரு நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் திடீரென்று விரிசல் விழுந்துள்ளது. அந்த விரிசல் பெரிதாகி வருவதால் குடியிருப்புகளை சுற்றி மலைப்பகுதி உள்ளதால் அங்கு நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.

இதனால், அந்த குடியிருப்பு பகுதிகளில் வசித்து வந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் விராஜ்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நேரு நகர் குடியிருப்பு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்கவும், விரிசலை சரி செய்யவும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதேபோல, விராஜ்பேட்டையில் மலையையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிறிய, சிறிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. அந்த விரிசல்களால் பாதிப்பு இல்லை என்றாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

குடகு மாவட்ட கலெக்டர் அனீஷ் கண்மணி ஜாய் நிருபர்களிடம் கூறுகையில், குடகு மாவட்டம் மழை வெள்ளம், நிலச்சரிவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். குடகு மாவட்டத்தில் ரூ.700 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அறிக்கை வந்த பிறகு மாநில அரசிடம் அதனை தாக்கல் செய்து நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story