பேராம்பூர் சேதமடைந்த பெரியகுளத்தின் மதகை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


பேராம்பூர் சேதமடைந்த பெரியகுளத்தின் மதகை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Aug 2019 10:45 PM GMT (Updated: 17 Aug 2019 7:03 PM GMT)

முதல்-அமைச்சர் குறைதீர்க்கும் முகாமில் பேராம்பூரில் சேதமடைந்த பெரியகுளத்தின் மதகை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விராலிமலை,

விராலிமலை தாலுகா பேராம்பூரில் முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார் சதீஷ் சரவணகுமார் தலைமை தாங்கினார். நீர்பழனி வருவாய் ஆய்வாளர் ஜோதி நிர்மலாராணி முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அதிகாரி செல்லப்பாண்டியன் வரவேற்று பேசினார். தொடர்ந்து பேராம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சாத்தப்பன், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதி மலம்பட்டி சவரிநாதன், விவசாயிகள் துரை, மாரி உள்ளிட்டோர் முகாமில் கலந்து கொண்டு பேராம்பூர் ஊராட்சியை சேர்ந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

மதகை சீரமைக்க வேண்டும்

அப்போது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது கடந்த இரண்டு வருடமாக சேதமடைந்த நிலையில் இருக்கும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேராம்பூர் பெரியகுளத்தின் மதகை உடனடியாக சீரமைக்க வேண்டும். மலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு வருவாய் துறை இடம் ஒதுக்கித்தர வேண்டும். காவிரி குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு குளம் குட்டை கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குளங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அழித்துவிட்டு, நன்மை தரும் மரக்கன்றுகள் நடவேண்டும் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

தொடர்ந்து தாசில்தார் பேசுகையில், பேராம்பூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேரிலும் மனுக்கள் மூலமாகவும் இங்கு அளித்துள்ள பிரதான கோரிக்கையான பெரியகுளத்தின் மதகை சீரமைத்தல் பணி உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

மேலும் விவசாயிகள் பி.எம். கிசான் திட்ட உதவித்தொகையை பெற்று பயனடைய வேண்டும் எனவும் பயிர் சாகுபடி குறித்து பதிவு செய்ய ஈ-அடங்கல் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை குறித்த டிஎன் ஸ்மார்ட் ஆப் ஆகியவற்றை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் பேசினார்.

132 மனுக்கள்

இதையடுத்து முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, கஜாபுயலால் சேதடமைந்த பேராம்பூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு வகுப்பறை, கழிவறை கட்டிடம், குடிநீர் வசதி, கல்லுப்பட்டி சாலையை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 132 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு அவை மேல்நடவடிக்கைக்காக தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பேராம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கலியமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரிகள் செந்தில்குமார், கவிச்சக்ராணு மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராம்பூர் ஊராட்சி மன்ற செயலாளர் வசந்தி நன்றி கூறினார்.

Next Story