திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்


திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 17 Aug 2019 10:30 PM GMT (Updated: 17 Aug 2019 7:19 PM GMT)

திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடந்தது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 439 சங்கங்கள் உள்ளது. இந்த சங்கங்களின் தலைவர், துணை தலைவர் பதவிகள் தவிர மீதமுள்ள நிர்வாகிகள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இதன்படி, மொத்தமுள்ள 17 பதவிகளில் 9 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும், 5 மகளிருக்கும், 3 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

காலையில் இருந்து தொடங்கிய இந்த வேட்பு மனுதாக்கல் மாலை வரை நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். கூட்டுறவு சார் பதிவாளர் சபரிநாதன் தேர்தல் அதிகாரியாக இருந்து, மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் வருகிற 19-ந்தேதி பரிசீலனை செய்யப்படும். 20-ந்தேதி வேட்பு மனு திரும்ப பெறுதலும், இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும். தொடர்ந்து வருகிற 24-ந்தேதி நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது. 26-ந்தேதி தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story