விவசாயிகள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் அமைச்சர் காமராஜ் வேண்டுகோள்


விவசாயிகள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் அமைச்சர் காமராஜ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 Aug 2019 4:30 AM IST (Updated: 18 Aug 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் காமராஜ் வேண்டுகோள் விடுத்தார்.

தஞ்சாவூர்,

எல்லா வகையிலும் அனைத்து தரப்பு மக்களையும் குறிப்பாக விவசாயிகளை பாதுகாக்கும் அரசாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு விளங்குகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சத்து 9 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டு ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 1 லட்சம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்களும் இந்த தண்ணீர் மூலம் பயன் அடையும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளை எப்படி பாதுகாத்து வந்தாரோ அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் விவசாயிகளை பாதுகாத்து வருகிறார்.

தூர்வாரும் பணி, குடிமராமத்து பணியை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அணையில் தண்ணீர் இருப்பு, தண்ணீர் வரத்து, மழையின் அளவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படும்.

சென்ற ஆண்டு கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்றது. இதன் காரணமாக தான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் வாயிலாக 20 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய முடிந்தது. இந்த ஆண்டும் கடைமடை பகுதி வரை தண்ணீர் உறுதியாக செல்லும். தூர்வாரும் பணி என்பது தொடர் நடவடிக்கை. அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் தூர்வாரும் பணி முடிவடைந்துள்ளது. மீதமுள்ள இடங்களிலும் தூர்வாரும் பணி நடைபெறும்.

இப்போது சம்பா நாற்று விடுவதற்கான நேரம் என்பதால் தண்ணீர் குறைந்த அளவு திறந்து விடப்பட்டுள்ளது. பின்னர் தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் அதிக அளவு திறந்து விடப்படும். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும். ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வைத்திலிங்கம் எம்.பி. கூறும்போது, தண்ணீர் வரத்தை பொறுத்து விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்து விடப்படும். குளங்கள், ஏரிகளிலும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அமைச்சர் துரைக்கண்ணு கூறும்போது, விவசாயிகளுக்கு வழங்கிய கடன்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் காக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறும்போது, நாகை-கடலூர் மாவட்டங்களின் எல்லையில் கொள்ளிடம் ஆற்றில் தூவாரமங்கலத்தில் தடுப்பணை கட்ட ரூ.436 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் கூறும்போது, காவிரி வழக்கின் இறுதி தீர்ப்புபடி புதுச்சேரி மாநிலத்துக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் 2.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் புதுச்சேரிக்குரிய தண்ணீர் கிடைக்கவில்லை. தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் 2.25 டி.எம்.சி. தண்ணீரையும் சேர்த்து வழங்க வேண்டும். இறுதி தீர்ப்பின் அடிப்படையில் 7 டி.எம்.சி. தண்ணீர் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டால் தான் கடைமடை பகுதி வரை தண்ணீர் வந்து சேரும். கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும். தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் காவிரியில் உரிமை இருக்கிறது. எனவே கர்நாடக அரசு முறையாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றார்.

Next Story