பா.ஜ.க. அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒன்றிணைக்க வேண்டும் தஞ்சையில், சீதாராம் யெச்சூரி பேச்சு


பா.ஜ.க. அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒன்றிணைக்க வேண்டும் தஞ்சையில், சீதாராம் யெச்சூரி பேச்சு
x
தினத்தந்தி 18 Aug 2019 4:30 AM IST (Updated: 18 Aug 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி பேசினார்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3-வது மாநில மாநாடு தஞ்சையில் 3 நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டின் நிறைவு நாளான நேற்று பேரணி நடந்தது. தஞ்சை கரந்தையில் உள்ள போக்குவரத்துக்கழக அலுவலகம் அருகே இருந்து தொடங்கிய பேரணி கீழவாசல், அண்ணா சிலை, ராஜாமிராசுதார் மருத்துவமனை சாலை வழியாக பொதுக்கூட்டம் நடைபெற்ற திலகர் திடலை அடைந்தது.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்புத்தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், மாநில தலைவர் செல்லக்கண்ணு, பொருளாளர் மோகனா, ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் அகியோர் முன்னிலை வகித்தனர். துணைபொதுச்செயலாளர் சின்னை.பாண்டியன் வரவேற்றார்.

சீதாராம் யெச்சூரி

மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சமூக ஒடுக்குமுறைக்கும், பொருளாதார ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டம் மற்றும் முக்கியமான பிரச்சினைகளை முன்னெடுத்து செல்லக்கூடிய இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி. இந்த 2 போராட்டங்களும் 2 கால்களை போன்றது. ஒரு கால் இல்லாவிட்டாலும் நம்மால் முன்னேறி செல்ல முடியாது. எனவே இந்த இரு இலக்கை நோக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செல்கிறது. அந்த வகையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான, பொருளாதார சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடு அமலில் இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை நிலை முன்னேறி செல்ல முடியாத நிலையில் உள்ளது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கொள்கை சார்ந்த பிடியில் இருப்பதே இந்த சாதி, சமூக ஒடுக்குமுறைக்கு காரணம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் முன்னேற வேண்டுமானால் அவர்களுக்கு சமூக, பொருளாதார விடுதலை வேண்டும். எனவே சமூக விடுதலை, பொருளாதார விடுதலைக்கான போராட்டம் ஒன்றுபட்ட போராட்டமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

பொதுத்துறை தனியார் மயம்

மத்திய பா.ஜ.க. அரசு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியலமைப்பு கட்டமைப்பையும் தகர்க்கக்கூடிய வகையில் செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டமானது மதச்சார்பின்மை, பொருளாதார சுயசார்பு, சமூக நீதிக்கட்டமைப்பு, கூட்டாட்சி ஆகிய 4 தூண்களில் நின்றுகொண்டிருக்கிறது.

இந்த நான்கு தூண்களையும் தகர்த்தெறியக்கூடிய மோசமான பாதையில் அரசு செல்கிறது. எனவே நாம் நடத்தக்கூடிய மிகப்பெரிய போராட்டங்களில் தீண்டாமை ஒழிப்பும் ஒன்று. கடந்த 70 ஆண்டுகளாக நாம் பெற்று வந்த பலன்கள் அனைத்தையும் அழிக்கக்கூடிய இந்த அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிராக முழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

தற்போது இடஒதுக்கீடே கேள்விக்குள்ளாகும் மோசமான நிலை உருவாகி இருக்கிறது. இதேபோல பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கக்கூடிய மோசமான பாதையில் பா.ஜ.க. அரசு செல்கிறது. தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டு பேச்சுக்கே இடமளிக்காத நிலை நிலவுகிறது. கல்வித்துறையில் மிகப்பெரிய தாக்குதலாக புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கிறது. இதன் மூலம், பள்ளிகள், கல்லூரிகள் தனியாருக்குத் தாரைவார்க்கக்கூடிய நிலைமை உருவாகும். சுகாதாரத்துறை, மருத்துவமனைகளையும் தனியார்மயமாக்க முயற்சி நடந்து வருகிறது.

ஒன்றிணைக்க வேண்டும்

வேலைவாய்ப்பு என்பது மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. வேலையின்மையும் தீவிரமடைந்து வருகிறது. மக்களை வறுமைக்கோட்டுக்குக் கீழே மேலும், மேலும் தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களை மென்மேலும் ஒடுக்கக்கூடிய மிக மோசமான நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டுள்ளது. இதேபோல ஜம்மு காஷ்மீரில் மிக மோசமான தாக்குதலை மத்திய அரசு நடத்தி வருகிறது. கூட்டாட்சி தத்துவத்தை உடைத்து ஒற்றை ஆட்சி முறையை நிலை நாட்ட மோடி அரசு முயற்சி செய்கிறது.

இந்து ராஷ்டிரீயத்தை கட்டமைப்பதற்காக ஒரே நாடு, ஒரே வரி, இந்து, இந்தி போன்றவற்றைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் அடிநாதமாக இருக்கிறது. இதை நாம் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே பா.ஜ.க. அரசுக்கு எதிராக பல்வேறு பகுதி, பகுதியாகப் பிரிந்து பல போராட்டங்களை நடத்தினாலும் கூட சமூக, பொருளாதார ஒடுக்குமுறை, உரிமைகள் பறிப்பு போன்றவற்றுக்கு எதிராக அனைத்து போராட்டங்களையும் ஒன்றிணைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வரவேற்புக்குழு பொருளாளர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story