மக்கள் மீது அக்கறை இல்லாமல் “ஆட்சியை கைப்பற்றுவதிலேயே மு.க.ஸ்டாலின் குறியாக உள்ளார்” - அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு
“மக்கள் மீது அக்கறை இல்லாமல் ஆட்சியை கைப்பற்றுவதிலேயே மு.க.ஸ்டாலினும், கனிமொழியும் குறியாக உள்ளனர்“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
தமிழக அரசு போக்குவரத்து துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த பழைய பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 8 புதிய பஸ்களும், அரசு போக்குவரத்து கழகத்திற்கு 6 புதிய பஸ்களும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த பஸ்கள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு கடற்கரை சாலை வழியாக முதல் முதலாக பஸ் இயக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் திறந்து விடுவதற்கு ஏதுவாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. 2 நாட்களில் தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்குள் குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் அனைத்து குளங்களும் தூர்வாரப்படும். அதற்கான பணி சிறப்பாக நடந்து வருகிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் லட்சியம் ஒன்று தான். ஆட்சி அதிகாரம் தான் அவர்களின் லட்சியம். கனிமொழி பேட்டி அளிக்கும் போதெல்லாம் ஆட்சி மாற்றம் குறித்து பேசி வருகிறார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பணி என்ன என்பதை தெரியாமல் எப்போதும் ஆட்சி மாற்றம் பற்றியே பேசி வருகிறார்.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்ததில் இருந்தே அவர்கள் ஆட்சி கனவில் தான் இருக்கிறார்கள். அவர்கள் மக்கள் மீது அக்கறை இல்லாமல் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றுவதிலேயே குறியாக உள்ளனர்.
டி.ராஜா இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு அ.தி.மு.க. தான் காரணம். தி.மு.க.விற்கு சென்ற பிறகு கம்யூனிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவர்கள் தரம்தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்துவது அவர்களின் தரத்திற்கு நல்லதல்ல.
நீட் தேர்வை தி.மு.க. அரசியல் ஆக்கி பார்க்கிறது. நீட் தேர்வு தமிழகத்தில் வரக்கூடாது என்ற நிலைபாட்டில் தான் ஜெயலலிதா இருந்தார். அதே நிலைபாட்டில்தான் தற்போதைய அரசும் உள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்று கடைசி வரை போராடிய மாநிலம் தமிழகம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story