நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு


நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 18 Aug 2019 4:30 AM IST (Updated: 18 Aug 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

என்.ஜி.ஓ. காலனியில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனி, கோவில்விளையில் ஒரு கட்டிடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. தகவல் அறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், கோவில்விளை ஊர் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் கடை முன்பு திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அவர்கள் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். போராட்டத்தில், சின்னணைந்தான்விளை ஊர் தலைவர் தங்ககிருஷ்ணன், தெங்கம்புதூர் பேரூர் தே.மு.தி.க. செயலாளர் கோபால், பா.ஜனதா மாவட்ட செயலாளர் ஜெகநாதன், விவசாய அணி செயலாளர் செல்லநாடார், தெங்கம்புதூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் லிவிஸ்டன், முன்னாள் கவுன்சிலர் ராஜகுமார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கஞ்சி காய்ச்சினர்

தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் பாஞ்சாலி, மதுசூதனபுரம் கிராம நிர்வாக அதிகாரி பிரதீப் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வராது என எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்ததால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறினர். அத்துடன் பெண்கள் கஞ்சி காய்ச்சவும் தொடங்கினர்.

பொதுமக்களுக்கு ஆதரவாக ஆஸ்டின் எம்.எல்.ஏ., பா.ஜனதா, கம்யூனிஸ்டு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு ஆதரவாக ஏராளமானோர் குவிந்ததால், கோவில்விளையில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அதிரடிபடை போலீசார் குவிக்கப்பட்டனர்.

பேச்சுவார்த்தை

தொடர்ந்து, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், டாஸ்மாக் தாசில்தார் பாபுரமேஷ் ஆகியோர் போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என்று எழுத்து பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Next Story