பாபநாசம், சேர்வலாறு அணைகளை ஞானதிரவியம் எம்.பி. ஆய்வு: விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை


பாபநாசம், சேர்வலாறு அணைகளை ஞானதிரவியம் எம்.பி. ஆய்வு: விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Aug 2019 3:30 AM IST (Updated: 18 Aug 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம், சேர்வலாறு அணைகளை ஞானதிரவியம் எம்.பி. நேற்று ஆய்வு செய்தார். அப்போது, விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

விக்கிரமசிங்கபுரம், 

நெல்லை தொகுதி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் நேற்று காரையாறு வந்தார். அங்கு பாபநாசம் அணையில் தண்ணீரின் அளவை பார்வையிட்டார். பின்னர் மாவட்டத்தின் விவசாய தேவைக்கான தண்ணீரை அணையில் இருந்து திறந்து விட்டால் விவசாயிகளுக்கு எந்த வகையில் பயன்படும் என்று கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசினார்.

அதனை தொடர்ந்து சேர்வலாறு சென்று, அங்குள்ள அணையை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

பாபநாசம் அணையில் தற்போது சுமார் 105 அடியும், சேர்வலாறு அணையில் 125 அடியும் தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரின் மூலம் நெல்லை மாவட்டத்தில் முக்கியமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் உள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், கன்னடியன் போன்ற கால்வாய்களிலும், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

ஏற்கனவே போதுமான தண்ணீர் இல்லாததால் மாவட்டத்தில் கார் சாகுபடி செய்ய முடியாமல் போய்விட்டது. தற்போது அணையில் போதுமான தண்ணீர் உள்ளது. எனவே அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் விவசாயிகள் தங்களின் விருப்பப்படி பயிர் செய்ய ஏதுவாக இருக்கும். ஆகையால் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் மூடப்பட்ட பாபநாசம் தலையணையை திறக்க சொல்லி கலெக்டரிடம் கோரிக்கை வைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story