நெல்லை, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் புதிய அரசு விரைவு பஸ்கள் - அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்
நெல்லை, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய புதிய அரசு விரைவு பஸ்களை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று தொடங்கி வைத்தார்.
நெல்லை,
தமிழகத்தில் பெரும்பாலான ஆம்னி பஸ்கள் இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் (சிலிப்பர்) இயக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி அரசு விரைவு பஸ்களையும் படுக்கை வசதியுடன் கூடியதாக இயக்க வேண்டும் என்று பயணிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையொட்டி தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்கள் தயார் செய்யப்பட்டன. இதில் நெல்லை மாவட்டத்துக்கு 4 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதுதவிர தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை கோட்டத்துக்கு 7 புதிய நவீன பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த பஸ்களின் போக்குவரத்து தொடக்க விழா நெல்லை புதிய பஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். விழாவில் விஜிலா சத்யானந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிரன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், இளைஞர் அணி அரிகரசிவசங்கர், கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, சிறுபான்மை பிரிவு மகபூப்ஜான் மற்றும் நெல்லை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் திருவம்பலம் பிள்ளை, பொதுமேலாளர் துரைராஜ், அரசு விரைவு போக்குவரத்து கழக நெல்லை கிளை மேலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அமைச்சர் ராஜலட்சுமி கூறுகையில், “தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.154 கோடி செலவில் 500 புதிய பஸ்களை மாநிலம் முழுவதும் வழங்கி உள்ளார். இதில் நெல்லை மாவட்ட மக்கள் பயன்படும் வகையில் 11 பஸ்கள் போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது.” என்றார்.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதியுடன் கூடிய 4 பஸ்களில், 2 பஸ்கள் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. இதில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படுக்கை வசதி ஒரு நபருக்கு ரூ.1,350, மற்ற நாட்களில் ரூ.1,250 கட்டணம் ஆகும். இருக்கை ஒரு சீட்டுக்கு ரூ.850 அனைத்து நாட்களிலும் கட்டணம் ஆகும்.
படுக்கை வசதி கொண்ட மற்ற 2 பஸ்களில் குளிர் வசதி கிடையாது. இந்த பஸ்கள் நெல்லையில் இருந்து சென்னை திருவான்மியூருக்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் படுக்கை வசதி ஒரு நபருக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.985, மற்ற நாட்களில் ரூ.860, இருக்கை வசதிக்கு ரூ.640 கட்டணம் ஆகும்.
மேலும் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் நெல்லையில் இருந்து திருப்பூருக்கு 2 பஸ்களும், செங்கோட்டையில் இருந்து திருப்பூருக்கு 2 பஸ்களும், சங்கரன்கோவிலில் இருந்து நெல்லைக்கு ஒரு பஸ்சும், தென்காசியில் இருந்து நெல்லைக்கு ஒரு பஸ்சும், திசையன்விளையில் இருந்து ராமேசுவரத்துக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகின்றன.
Related Tags :
Next Story