வாணியம்பாடி அருகே துப்பாக்கி குண்டு காயத்துடன் இறந்து கிடந்த வாலிபர் சுட்டுக் கொலையா? போலீஸ் விசாரணை
வாணியம்பாடி அருகே துப்பாக்கி குண்டு காயத்துடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் சுட்டு கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி,
தமிழக - ஆந்திர எல்லையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தகரகுப்பம் புருவமலை பகுதியில் நேற்று முன்தினம் முத்து என்பவரது மகன் சக்திவேல் (வயது 21) மற்றும் அவரது நண்பர் காட்டு பகுதிக்குள் வேட்டையாட சென்றனர். ஆனால் சக்திவேல் மட்டும் வீடு திரும்பவில்லை.
நேற்று காலையில் அப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றவர்கள் சக்திவேல் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சக்திவேலின் மார்பில் ஒரு குண்டு பாய்ந்து இருந்தது. மேலும் அவரது உடல் அருகே நாட்டு துப்பாக்கி, ஒரு பை கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
சக்திவேல் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டாரா? அல்லது காட்டு விலங்கை குறிபார்த்து சுடும்போது தவறுதலாக அவர் மீது குண்டு பாய்ந்ததா? அல்லது அவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்றும், உடன் சென்ற நண்பர் யார்? அவர் எங்கு உள்ளார்? என்றும் போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story