கூடலூர் அருகே அங்கன்வாடி பெண் ஊழியருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது


கூடலூர் அருகே அங்கன்வாடி பெண் ஊழியருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Aug 2019 5:00 AM IST (Updated: 18 Aug 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே அங்கன்வாடி பெண் ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர்,

கூடலூர் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் புளோரிடா மேரி (வயது 41). இவரது கணவர் பன்னீர்செல்வம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து புளோரிடா மேரி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அங்கன்வாடி மைய உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். தற்போது ஸ்ரீமதுரை ஊராட்சி போஸ்பாரா அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி அங்கன்வாடி மையத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் புளோரிடா மேரியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்த புகாரின் பேரில் கூடலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கம்மாத்தி, கூடலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களும் திருட்டு போயின.

இது தொடர்பாக கூடலூர் அருகே புளியாம்பாறை பகுதியை சேர்ந்த தியாகராஜ்(வயது 22) என்பவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக புளோரிடாமேரியை அவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. மேலும் கம்மாத்தி உள்பட பல இடங் களில் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் கூடலூர் போலீசார் தியாகராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, கைது செய்யப்பட்ட தியாகராஜ் முன்விரோதம் காரணமாக அங்கன்வாடி மைய உதவியாளர் புளோரிடா மேரியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இந்த கொலை முயற்சி வழக்கு மட்டுமின்றி மோட்டார் சைக்கிள்கள் திருடுதல், கடைக்கு தீ வைத்தல், வழிப்பறி உள்பட 8 குற்ற வழக்குகள் அவர் மீது உள்ளது என்றனர்.

Next Story