பர்கூர் ஒன்றியத்தில் ஏரிகளில் குடிமராமத்து பணிகள் கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்


பர்கூர் ஒன்றியத்தில் ஏரிகளில் குடிமராமத்து பணிகள் கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Aug 2019 10:45 PM GMT (Updated: 17 Aug 2019 9:03 PM GMT)

பர்கூர் ஒன்றியத்தில் ஏரிகளில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

பர்கூர்,

பர்கூர் ஒன்றியம்் வரட்டனப்பள்ளி ஊராட்சி கன்னிசெட்டி ஏரி, சிகரலப்பள்ளி ஊராட்சி கப்பல்வாடி கீழ் ஏரி ஆகிய ஏரிகளில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் குடிமராமத்து மற்றும் தூர் வாரும் பணிகளை கலெக்டர் பிரபாகர் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் அறிவுரைப்படி ஏரிகள், குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல ஊரக பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களில் குடிமராமத்து மற்றும் தூர் வாரும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை எதிர் நோக்கி உள்ள நிலையில் நீர் நிலைகளில் மழை நீரை சேமிக்கும் பொருட்டு அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் மூலம் மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தூர் வாரும் பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 10 ஒன்றியத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் தலா 10 ஏரிகள் என மொத்தம் 100 ஏரிகள் தூர்வாரப்படுகிறது.

கரைகள் உயர்த்தும் பணி

அதே போல மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 325 குளம் குட்டைகள் என தலா ரூ.1 லட்சம் மதிப்பில் தூர் வாரப்படுகிறது. இப்பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டு ஏரி கரைகள் உயர்த்தியும், தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அதிக அளவில் மழை நீரை சேமிக்கவும், குளம் குட்டைகள் மற்றும் ஏரிகளுக்கு வரும் நீர் வரத்து கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது.

பர்கூர் ஒன்றியம் வரட்டனப்பள்ளி ஊராட்சியில் உள்ள கன்னிசெட்டி ஏரி, சிகரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கப்பல்வாடி கீழ் ஏரி தலா ரூ. 5 லட்சம் மதிப்பில், (2019 -2020)-ம் நிதியாண்டில் ஊரக பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களை குடிமராமத்து மற்றும் தூர் வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளை தரமாகவும், மழைநீர் சேமிக்கும் பொருட்டு கரைகளை உயர்த்தியும், நீர் வரத்து கால்வாய்கள், நீர் வெளியேறும் பகுதிகளை நல்ல முறையில் தூர் வாரி பணிகளை முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.பெருமாள், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயபால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பயாஸ் அகமது, ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், ஒன்றிய பொறியாளர் கோவிந்தராஜ், ஜெகதீசன், பணி மேற்பார்வையாளர் மூர்த்தி, லட்சுமி பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story