ராமநாதபுரம் நகரில் 12 மணி நேரம் மின்தடை; பொதுமக்கள் அவதி


ராமநாதபுரம் நகரில் 12 மணி நேரம் மின்தடை; பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 17 Aug 2019 10:30 PM GMT (Updated: 17 Aug 2019 9:50 PM GMT)

ராமநாதபுரம் நகரில் அடுத்தடுத்து உயர்மின்கம்பத்தில் மின்சாரத்தை கடத்தும் பீங்கான் வெடித்து சிதறியதால் இரவில் தொடங்கி 12 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் லேசான மழை பெய்தது. ஒருசில இடங்களில் தூரல் மழையும், சில இடங்களில் நல்ல மழையும் பெய்தது. அனைத்து பகுதிகளும் வறண்டு கிடப்பதால் இந்த மழையால் மண் மட்டுமே லேசாக நனைந்து மண்வாசம் வீசியது. தூறலாக பெய்த இந்த மழையால் மாவட்டத்தில் வெப்பநிலை மாறி குளிர்ந்த காற்று வீசியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென மின்தடை ஏற்பட்டது. மழை பெய்வதால் மின்தடை ஏற்பட்டிருக்கும் என்று மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் இந்த மழை நின்ற பிறகும் மின்சாரம் வரவில்லை. இரவில் தொடர்ந்து நீடித்த இந்த மின்தடை நேற்று காலை 8.30 மணியளவில்தான் படிப்படியாக சரியாகி அனைத்து பகுதிகளுக்கும் மின்வினியோகம் சீரானது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை துணை மின்நிலைய பகுதியில் இருந்து ரெயில்வே கேட் வரையிலான உயர்அழுத்த மின்கம்பத்தில் மின்சாரத்தை சீராக கடத்தும் பீங்கான் உபகரணம் வெடித்து சிதறியது. இந்த பீங்கான்களை மாற்றி மின்வினியோகம் வழங்க முயன்றபோது அடுத்தடுத்து வரிசையாக 5 இடங்களில் பீங்கான்கள் வெடித்து சிதறின. இந்த பழுதை மின் பணியாளர்கள் விடிய விடிய சரிசெய்து அதன்பின்னர் மின்வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மாற்று துணை மின்நிலையங்களில் இருந்து ஒருசில பகுதிகளுக்கு நள்ளிரவிலேயே மின்வினியோகம் செய்யப்பட்டது. இவ்வாறு தெரிவித்தனர்.

மழை பெய்யாத போது வெயில் காரணமாக வெடிப்பதாக தெரிவித்து வந்த மின்வாரியத்தினர் தற்போது மழை பெய்ததால் வெடித்ததாக தெரிவித்தனர். ஒட்டுமொத்தமாக இதற்கு என்ன காரணம் என்று இதுவரை மின்வாரியத்தினர் கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். இதன்காரணமாக முதல்நாள் இரவு 8.30 மணிக்கு தொடங்கிய மின்தடை மறுநாள் காலை 8.30 மணி வரை 12 மணிநேரம் நீடித்தது.

இந்த மின்தடையால் பொதுமக்கள், குழந்தைகள், வயதானவர்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்தனர். மழைபெய்து குளுமையாக இருந்ததால் வெப்பத்தாக்கமின்றி நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ராமநாதபுரத்தில் அடிக்கடி இதுபோன்று மின்கடத்தும் பீங்கான் வெடிப்பது வாடிக்கையாவதும், அதனை விடிய விடிய சரிசெய்வதும் தொடர்கதையாகி வருகிறது. பீங்கான்களை வெடிக்காதவாறு மாற்றி வருகிறோம் என்றும், வெடிக்காதவாறு தண்ணீர் பீய்ச்சி அடித்து சரிசெய்து வருகிறோம் என்றும் மின்வாரியத்தினர் கூறிவந்தாலும் இந்த பிரச்சினை தொடர்கதையாகி வருகிறது. 12 மணிநேரம் நீடித்த இந்த மின்தடையால் ராமநாதபுரம் நகர் பகுதி, கலெக்டர் அலுவலக பகுதி, பட்டணம்காத்தான், பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகள் விடிய விடிய இருளில் மூழ்கின. இனிவரும் காலங்களில் இதுபோன்ற மின்தடை ஏற்படாமல் இருக்க போர்க்கால நடவடிக்கை எடுத்து சரிசெய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story