பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தவிடாமல் அதிகாரிகளின் கைகளை ஆட்சியாளர்கள் கட்டிப்போட்டுள்ளனர் - சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தவிடாமல் அதிகாரிகளின் கைகளை ஆட்சியாளர்கள் கட்டிப்போட்டுள்ளனர் - சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Aug 2019 12:15 AM GMT (Updated: 18 Aug 2019 12:03 AM GMT)

சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்தவிடாமல் அதிகாரிகளின் கைகளை ஆட்சியாளர்கள் கட்டிப்போட்டுள்ளனர் என்று பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.

பாகூர்,

புதுச்சேரி மாநில பா.ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் அதற்கான வாகன பிரசாரம் தவளக்குப்பத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விவசாய அணி மாநில தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன், விவசாய அணி மாநில பொதுச்செயலாளர்கள் சுரேஷ், சிவனொளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., தேசிய செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாநில துணை தலைவர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு தாம்பாள தட்டில் வெற்றிலை பாக்குடன், உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தையும் வைத்து பா.ஜனதா கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்தனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வாகன பிரசாரத்தை சாமிநாதன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த காலங்களில் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது புதுச்சேரியில் நியமிக்கப்படும் கவர்னர்கள் தலையாட்டி பொம்மையாக இருந்தனர். அதனால் காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு ஊழல்களும், முறைகேடுகளும் நடந்தன. தற்போதும் அதுபோன்று நடக்கக்கூடாது என்பதற்காக நேர்மையாக பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பெடி புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டார்.

பா.ஜனதா ஆட்சியில் இல்லாத பெரிய மாநிலங்களான தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநில ஆட்சிகளுக்கே பா.ஜனதா தொந்தரவு அளித்தது இல்லை.

அதுபோன்ற நிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு கவர்னரை கொண்டு ஆட்சியாளர்களின் கையை கட்டிப்போட்டுள்ளதாக கூறுகின்றார். தனது இயலாமையை மூடி மறைப்பதற்காக இவ்வாறு அவர் பொய் கூறுகின்றார். புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் 30 சதவீத நிதி ஊழலால் விரயம் செய்யப்பட்டு வருகின்றது. கமிஷனுக்காக ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களாலேயே இந்த அரசு மிரட்டப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அமைச்சரவை கூட்டத்தில்கூட அமைச்சர்கள் பங்கேற்பது இல்லை.

கடந்த 1-ந் தேதி முதல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆனாலும் அனைத்து இடங்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சகஜமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த தடை உத்தரவை செயல்படுத்தவிடாமல் அதிகாரிகளின் கையை கட்டிப்போட்டு இருப்பது முதல்-அமைச்சரும், ஆட்சியாளர்களும்தான்.

ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி அதற்கு மாறாக மத்திய அரசும், கவர்னரும் தங்கள் கையை கட்டிப்போட்டு இருப்பதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றார். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story