மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 1.50 லட்சம் குடும்பத்திற்கு அரிசி, உணவு பொருட்கள் வினியோகம்


மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 1.50 லட்சம் குடும்பத்திற்கு அரிசி, உணவு பொருட்கள் வினியோகம்
x
தினத்தந்தி 18 Aug 2019 5:48 AM IST (Updated: 18 Aug 2019 5:48 AM IST)
t-max-icont-min-icon

மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 1.50 லட்சம் குடும்பத்தினருக்கு அரசு உத்தரவின் பேரில் அரிசி மற்றும் உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் பெலகாவி, பாகல்கோட்டை, தட்சிண கன்னடா, குடகு, யாதகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்கள் மழையாலும், கிருஷ்ணா, பீமா ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களைச் சேர்ந்த 86 தாலுகாக்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது அந்த கிராமங்களில் வெள்ளம் வடிந்து வருகிறது. மழையால் பல லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் வடிந்து வருவதால் நிவாரண முகாம்களில் தங்கி இருந்த மக்கள் தங்களது வீடுகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிகமாக தேவையான பொருட்களை வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது மழையால் பாதிக்கப்பட்ட 1.50 லட்சம் குடும்பத்திற்கும் தலா 10 கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு லிட்டர் பாமாயில், ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ உப்பு, 5 லிட்டர் மண்எண்ணெய், மசாலா பொருட்கள் ஆகிய உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க மாநில அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி, பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த 90 ஆயிரம் குடும்பத்திற்கு இந்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல யாதகிரி, பாகல்கோட்டை, கொப்பல், உத்தர கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 60 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்று, மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ந்து அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கப் படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story