பா.ஜனதா அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தப்படும் - சித்தராமையா எச்சரிக்கை
அன்ன பாக்யா, இந்திரா உணவக திட்டங்களை நிறுத்தினால் பா.ஜனதா அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று சித்த ராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-
எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு தேவையான அன்ன பாக்யா, இந்திரா உணவகம் போன்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினேன். அந்த திட்டங்கள் கூட்டணி ஆட்சியிலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 4 கோடி ஏழை மக்களுக்கு 7 கிலோ அரிசி வழங்கப்பட்டது. மாநிலத்தில் கூட்டணி ஆட்சியிலும் ஏழை மக்களுக்கு 7 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.
தற்போது பா.ஜனதா ஆட்சியில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் 7 கிலோ அரிசியை 5 கிலோவாக குறைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. ஒரு வேளை அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவை குறைத்தால், அதனை சகித்து கொண்டு இருக்கமாட்டோம்.
கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.6 ஆயிரத்துடன், மாநில அரசு ரூ.4 ஆயிரத்தை சேர்த்து ஒட்டு மொத்தமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மாநில அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன். ஆனால் கிசான் சம்மான் திட்டத்திற்கு நிதி தேவைப்படுவதால், ஏழை மக்களுக்கு வழங்கும் அரிசியின் அளவை குறைக்க அரசு நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த திட்டத்திற்கு தேவையான நிதியை வேறு வழியின் மூலமாக அரசு திரட்டி கொள்ள வேண்டும்.
மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு வழங்கும் 7 கிலோ அரிசியை, 10 கிலோவாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. தற்போது பா.ஜனதா அரசு ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வரும் அரிசியின் அளவை குறைக்க முடிவு எடுத்தால், அதனை பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.
பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் இந்திரா உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் மூலம் ஏழை மக்கள் குறைந்த விலையில் சாப்பிட்டு வருகின்றனர். இந்த திட்டத்திற்கு மாநில அரசு தான் நிதி ஒதுக்கி வருகிறது. பெங்களூரு தவிர மாநிலத்தில் பிற மாவட்டங்களில் 248 இந்திரா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை தாலுகா மட்டத்திலும் செயல்படுத்த வேண்டியது அவசியமாகும். குறிப்பாக அரசு ஆஸ்பத்திரிகள், முக்கிய பஸ் நிலையங்களில் இந்திரா உணவகத்தை அரசு திறக்க வேண்டும்.
அன்ன பாக்யா, இந்திரா உணவகம் போன்ற ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு தேவையான நிதியை மாநில அரசு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். அந்த திட்டங்களை முடக்குவதற்காக நிதி ஒதுக்குவதை குறைத்தாலோ, அந்த திட்டங்களை நிறுத்தினாலோ வீதியில் இறங்கி தீவிர போராட்டம் நடத்தப்படும். சட்டசபையிலும் போராட்டம் நடத்தப்படும். ஏழை மக்களுக்கான அந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
சித்தராமையாவின் குற்றச் சாட்டுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தின் விவரம் வருமாறு:-
எனது தலைமையிலான அரசில், மற்ற அரசுகள் கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை ரத்து செய்ய போவதில்லை. மக்கள் நல திட்டங்களை ரத்து செய்வது குறித்து எனது தலைமையிலான அரசு எந்த விதமான ஆலோசனையும் நடத்தவில்லை. அன்ன பாக்யா திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அந்த திட்டம் தொடருவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story