உடுமலை அருகே ரூ.26 கோடியில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள்; அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு


உடுமலை அருகே ரூ.26 கோடியில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள்; அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு
x
தினத்தந்தி 18 Aug 2019 10:45 PM GMT (Updated: 18 Aug 2019 5:29 PM GMT)

உடுமலை அருகே ரூ.26 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப்பணிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்ஆய்வு செய்தார்.

உடுமலை,

உடுமலை சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட புக்குளம் ஊராட்சி பகுதியில் 2.62 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் தமிழ்நாடு அரசு குடிசைப்பகுதிமாற்று வாரியம் சார்பில் ரூ.25 கோடியே 92 லட்சம் செலவில் தரைத்தளம் மற்றும் 3 மேல்தளங்களுடன் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்து 6 பிளாக்குகளாக மொத்தம் 320 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வீடும் 401 சதுர அடி பரப்பளவு கொண்டது.

ஒவ்வொரு வீட்டிலும் ஹால், பால்கனி, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை, கழிவறை ஆகியவை உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டிட கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டுமானப்பணிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. வாரியத்தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கும்படி துரிதப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு கூறுகையில் “ இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டும் பணிகள் 3 மாதங்களில் முடிவடையும். பணிமுடிந்ததும் இந்த அடுக்குமாடி குடியிருப்பை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார் ” என்றார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு அரசு குடிசைப்பகுதி மாற்று வாரிய நிர்வாகப்பொறியாளர் (கோவை)ஏ.எல்.சி.குமார், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் சி.ராமசாமி, உடுமலை தாசில்தார் தயானந்தன், ஆவின் பால் மாவட்டத்தலைவர் வக்கீல் மனோகரன், மாவட்ட அரசு வக்கீல் வேல்மணி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) செல்ட்டன் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் அன்வர்ராஜ், நாகராஜ், ராமநாதன், பாலமுருகன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story