விநாயகர் சதுர்த்தியையொட்டி, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் - கலெக்டர் தகவல்


விநாயகர் சதுர்த்தியையொட்டி, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 Aug 2019 4:00 AM IST (Updated: 19 Aug 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தியையொட்டி அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேனி,

விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினை முன்னிட்டு சிலை அமைப்பதற்கு சில முக்கிய நிபந்தனைகளை கடைபிடித்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை கரைப்பதற்கு அரசின் விதிமுறைகளை கடைபிடித்திட வேண்டும்.

அதன்படி சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர்களிடம் (தனியார், அரசு, உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை போன்றவை) தடையில்லா சான்று, சிலை அமைத்தல் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பது தொடர்பாக காவல்துறையிடம் தடையில்லா சான்று, தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று, மின்சார வாரியத்திடம் தடையில்லா சான்று ஆகிய தடையில்லா சான்றுகளுடன் வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்றிட வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டது, சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்ற கிழங்கு மாவு, மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும்.

ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. சிலைகள் கரைப்பதற்கு முன்பாக மாலைகள், வஸ்திரங்கள், அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இவற்றை கரைக்கப்படும் இடங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் தரம் வாரியாக பிரித்துப் போட வேண்டும்.

விநாயகர் சிலைகள் மாவட்ட நிர்வாகத்தினால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். அதன்படி பெரியகுளத்தில் வராகநதியாற்றில் பாலசுப்பிரமணியன் கோவில் அருகிலும், உத்தமபாளையத்தில் முல்லைப் பெரியாற்றில் ஞானம்மாள் கோவில் அருகிலும், கம்பத்தில் முல்லைப் பெரியாற்றில் சுருளிப்பட்டி (கம்பம்) ரோட்டிலும், தேனி முல்லைப்பெரியாற்றில் அரண்மனைப்புதூர் பாலம் அருகிலும், ஆண்டிப்பட்டியில் வைகை ஆற்றில் வைகை அணை (ஆண்டிபட்டி-பெரியகுளம் சாலை) பாலம் அருகிலும், வருசநாட்டில் வைகை ஆற்றில் மொட்டப்பாறை தடுப்பு அணையிலும், போடிநாயக்கனூர் கொட்டக்குடி (புதூர்) ஆற்றிலும், மார்க்கையன்கோட்டையில் முல்லைப்பெரியாற்றில் பாலம் அருகிலும், சின்னமனூரில் முல்லைப்பெரியாற்றில் பாலம் அருகிலும் கரைத்திட வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story