தேனி மாவட்டத்தில், கண்மாய் தூர்வாரும் பணிகள் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு


தேனி மாவட்டத்தில், கண்மாய் தூர்வாரும் பணிகள் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு
x
தினத்தந்தி 19 Aug 2019 4:30 AM IST (Updated: 19 Aug 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் தூர்வாரும் பணிகளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார்.

தேனி,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் தர்மாபுரி ஊராட்சியில் கன்னிமார்குளம் கண்மாய், கோட்டூர் ஊராட்சியில் பூச்சிகுளம் கண்மாய், நாகலாபுரம் ஊராட்சியில் பூசாரிக்கவுண்டன்பட்டிகுளம் கண்மாய், ராசிங்காபுரம் ஊராட்சியில் கவுண்டன்குளம் கண்மாய் ஆகியவற்றில் தூர்வாரும் பணி நடக்கிறது. இந்த பணிகளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு செய்தார்.

மேலும் அவர் தர்மாபுரி பெருமாள் கோவிலில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி, கன்னிமார்குளத்துக்கு அருகில் பொது இடத்தில் 200 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி, கோட்டூர் ஊராட்சியில் கோபிநாதன் கோவில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி, பூச்சிகுளம் கண்மாய் அருகில் பொது இடத்தில் 400 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி, நாகலாபுரம் ஊராட்சியில் சுப்புச்செட்டியார் தோட்டத்தில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்களுடன் இணைந்து தென்கரை பேரூராட்சி பாப்பையன்பட்டி கண்மாய், கோடாங்கிபட்டி ஊராட்சி கணக்கன்குளம் கண்மாய் ஆகியவற்றில் மேற்கொண்ட தூர்வாரும் பணிகளை துணை முதல்-அமைச்சர் பார்வையிட்டார். மேலும் டொம்புச்சேரி ஊராட்சியில் டொம்புச்சேரியம்மன் கண்மாய், சில்லமரத்துப்பட்டி ஊராட்சியில் கவுண்டன்குளம் கண்மாய், பூதிப்புரம் பேரூராட்சியில் ராஜபூபாலசமுத்திரம் கண்மாய், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குளம், கருங்குளம் கண்மாய் ஆகிய கண்மாய்களில் பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உப்புக்கோட்டை ஊராட்சியில் சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. இந்தநிலையில் நேற்று கண்மாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட அந்த வழியாக வந்த துணை முதல்-அமைச்சரை பாதிக்கப்பட்ட மக்கள் சந்தித்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு நஷ்டஈடு வழங்கக்கோரி கண்ணீர் மல்க மனு கொடுத்தனர். அப்போது மனுவை பெற்றுக் கொண்ட துணை முதல்-அமைச்சர், உங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் திலகவதி, செயற்பொறியாளர் கவிதா, உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன், பெரியகுளம் ஆர்.டி.ஓ.ஜெயபிரித்தா, உதவித்திட்ட அலுவலர் தண்டபாணி, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரஅமைப்பு) செயற்பொறியாளர் சுந்தரப்பன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவிப்பொறியாளர் ராமேஸ்வரன், தாசில்தார்கள் மணிமாறன், ரத்தினமாலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீஸ் சந்திரபோஸ், எபி, சுரேஷ், சாந்தி, முன்னாள் எம்.பி.க்கள் ஆர்.பார்த்திபன், எஸ்.பி.எம்.சையதுகான், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story