சுத்தமான நீரை ஆத்துப்பாளையம் அணைக்கு கொண்டுவர வழக்கு தொடர்ந்துள்ளோம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி


சுத்தமான நீரை ஆத்துப்பாளையம் அணைக்கு கொண்டுவர வழக்கு தொடர்ந்துள்ளோம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 18 Aug 2019 11:15 PM GMT (Updated: 18 Aug 2019 8:35 PM GMT)

சுத்தமான நீரை ஆத்துப்பாளையம் அணைக்கு கொண்டுவர வழக்கு தொடர்ந்துள்ளோம் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. மற்றும் கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையுடன் இணைந்து ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம் கள்ளி பாளையத்தில் நடந்து கொண்டிருக்கிறது. 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் குழுவினர் நவீன உபகரணங்களுடன் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கின்றனர். தமிழக அரசின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழும் சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரால் க.பரமத்தி பகுதியில் பாசனத்திற்காக தண்ணீர் சேமித்து வைக்கும் பொருட்டு ஆத்துப்பாளையம் அணை கட்டப்பட்டது. கோவை பகுதிகளில் தொடர்ச்சியான மழைபெய்ததன் காரணமாக 22 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல தண்ணீர் இந்த அணைக்கு சமீபத்தில் வந்தது.

தற்போது மழை குறைந்து விட்டதால் அது நின்று விட்டது. பவானிசாகர் அணை நிரம்பியதும் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வடிந்து வரும் சுத்தமான நீரை ஆத்துப்பாளையம் அணைக்கு வரும் வகையில் கிளை வாய்க்காலில் திறந்து விட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் கொண்டுவர முழுமுயற்சியை மேற்கொண்டு வருகிறோம். மேலும் வாய்க் கால்களை சுத்தப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story