குளித்தலையில் புதிய சார்நிலைக்கருவூல அலுவலகம் கட்ட வேண்டும்


குளித்தலையில் புதிய சார்நிலைக்கருவூல அலுவலகம் கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 19 Aug 2019 4:30 AM IST (Updated: 19 Aug 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் புதிய சார்நிலைக்கருவூல அலுவலகம் கட்ட வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குளித்தலை,

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் குளித்தலை வட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் 36-ம் ஆண்டு நிறைவு விழா குளித்தலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு குளித்தலை வட்ட தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மாணிக்கம், மாநில துணைத்தலைவர்கள் (மதுரை மண்டலம்) பொன்னையா, வெங்கடாசலம் (திருச்சி மண்டலம்) ஆகியோர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் மத்திய அரசு, ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டதை போன்று 1.1.2016 முதல் 30.9.2017 வரையிலான 21 மாதங்களுக்கான ஊதியக்குழுவின் நிலுவை தொகையினை தமிழக அரசு வழங்க வேண்டும்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

பண்டிகை முன்பணம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது. ஓய்வூதியர்களின் குடும்ப நலன் கருதி பாதுகாப்பு நிதியை ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தி ஆணை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மத்திய அரசு மருத்துவ படியாக மாதம் ரூ.ஆயிரம் வழங்குவதைப்போல் தமிழக அரசும் வழங்கவேண்டும்.

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தால் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைந்து அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி காசில்லா மருத்துவம், அறுவை சிகிச்சையினை உடல் நலத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் பயன் பெறும் வகையில் நடை முறைப்படுத்த தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.

புதிய சார்நிலைக்கருவூல அலுவலகம்

100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் குளித்தலை சார்நிலைக்கருவூல அலுவலகம் இயங்கி வருகிறது. அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சென்றுவர அணுகு பாதை இல்லாமலும், அலுவலத்திற்கு உள்ளேயும் இடநெருக்கடி இருக்கிறது. எனவே குளித்தலையில் புதிய சார்நிலைக்கருவூல அலுவலகம் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத் தலைவர் சுவாமிநாதன், பொது செயலாளர் சிவசங்கரன், குளித்தலை உதவி கருவூல அலுவலர் ஜெயந்தி, கூடுதல் சார்நிலைக் கருவூல அலுவலர் தேவராஜன், அரவக்குறிச்சி வட்டத்தலைவர் சக்திவேல், முசிறி வட்டத் தலைவர் ராமசாமி மற்றும் இச்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story