சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில், தீபாவளி பண்டிகையையொட்டி காட்டன் சேலைகள் உற்பத்தி தீவிரம்


சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில், தீபாவளி பண்டிகையையொட்டி காட்டன் சேலைகள் உற்பத்தி தீவிரம்
x
தினத்தந்தி 19 Aug 2019 4:00 AM IST (Updated: 19 Aug 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசைத்தறி கூடங்களில் உயர்ரக காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் விசைத்தறி தொழில் அதிகம் நடைபெறுகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரத்தில் செயல்படும் ஒவ்வொரு விசைத்தறிகளிலும் ஒருநாளைக்கு 4 சேலைகள் வீதம் தினமும் 8,000-க்கும் அதிகமான காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 100 சதவீத காட்டனில் இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சேலைகள் உற்பத்திக்கான ஆர்டர்கள் அதிகளவில் வந்துள்ளது. இதன்காரணமாக சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் விசைத்தறி கூடங்களில் இரவு பகலாக சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்காக பெண்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு புதிய டிசைன்களில் சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்படி காத்தாடிபுட்டா, மெர்சரைஸ், பேன்சிகட்டம், ஜோதிகா, கும்கி, சுங்குடி, ஜரிகை காட்டன், செட்டிநாடு பிளைன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட டிசைன்களில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்காக அதிகளவில் ஆர்டர்கள் வந்திருப்பதால், சேலை உற்பத்தி செய்யும் பணியில் நெசவாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆர்டர்கள் நிறைய வந்திருப்பதால், இந்த ஆண்டு தீபாவளி தங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று கூறும் நெசவாளர்கள் ஜி.எஸ்.டியால் நெசவு தொழில் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ஜி.எஸ்.டி வருவதற்கு முன்பு வியாபாரிகள் மொத்தமாக சேலைகளை கொள்முதல் செய்து வந்தனர். ஆனால் ஜி.எஸ்.டி வந்த பின்னர் வியாபாரிகள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு சேலைகளையே கொள்முதல் செய்கின்றனர். இதனால் உற்பத்தி செய்யப்படும் சேலைகளை தேக்கி வைக்கும் நிலை உள்ளது. எனவே காட்டன் சேலைகள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story