மாவட்ட செய்திகள்

ஆவணி முதல் ஞாயிறு: நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது + "||" + First Sunday of the month: Devotees gather at Nagaraja Temple

ஆவணி முதல் ஞாயிறு: நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

ஆவணி முதல் ஞாயிறு: நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டனர்.
நாகர்கோவில்,

நாக வழிபாட்டுக்கு சிறந்த ஸ்தலமாக நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் திகழ்கிறது. இங்கு மூலவரான நாகராஜா வீற்றிருக்கும் இடத்தின் மேற்பகுதி ஓலையால் வேயப்பட்டு இருப்பதும், பக்தர்களுக்கு பிரசாதமாக புற்று மண் வழங்கப்படுவதும் கோவிலுக்கு கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.


நாகராஜா கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு சிறப்புடையதாகும். ஒவ்வொரு ஆவணி ஞாயிற்றுக்கிழமையும் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

பக்தர்கள் கூட்டம்

இதே போல ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்தனர்.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. ஆனால் கோவில் நடை திறப்பதற்கு முன்னதாகவே பக்தர்கள் வரத்தொடங்கினார்கள். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகராஜரை வழிபட்டனர்.

பலத்த பாதுகாப்பு

கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்தும், மஞ்சள் வைத்தும் பக்தர்கள் வழிபாடு செய்தார்கள். பின்னர் நாகர் சிலைகளுக்கு மத்தியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு நாகராஜர் சன்னதிக்கு புறப்பட்டனர். நாகராஜரை வழிபட்டதும் சிவன், அனந்தகிருஷ்ணர், துர்க்கை அம்மன், முருகன் ஆகிய சாமிகளையும் வணங்கினர்.

தரிசன கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்தவர்களுக்கு ஒரு லிட்டர் பால் பாயாசம், வெற்றிலை, பாக்கு மற்றும் பழம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காக கோவிலில் 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அதோடு கோவில் பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தளவாய்சுந்தரம் ஆய்வு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கோவிலுக்கு நேரில் சென்று பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் சரியாக செய்யப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தார். கோவிலை சுற்றிலும் பொதுமக்கள் கூடும் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு உள்ளதா? கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருக்கிறதா? என்று பார்வையிட்டார். கழிவறைகள், தண்ணீர் வசதி உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு சிறப்பு பஸ் வசதி தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

முன்னதாக கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு மோர் பந்தலை தளவாய்சுந்தரம் திறந்து வைத்து மோர் வழங்கினார். ஆய்வின்போது ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.