கிராமங்களில் அடிப்படை வசதி செய்து தர முடியவில்லை; உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தல்


கிராமங்களில் அடிப்படை வசதி செய்து தர முடியவில்லை; உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Aug 2019 5:15 AM IST (Updated: 19 Aug 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன்குறிச்சி, குகன்பாறை, சுப்பிரமணியபுரம், ஏழாயிரம்பண்ணை, கொம்மங்கிபுரம் மற்றும் கோட்டைப்பட்டி ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் பணியினை மாணிக்கம்தாகூர் எம்.பி.ஆய்வு செய்தார். தொழிலாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், வெம்பக்கோட்டை யூனியன் ஆணையாளர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சாந்தி, வெம்பக்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவர்கள் காளியப்பன், கிருஷ்ணசாமி, வெம்பக்கோட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர் கனிராஜ், கோட்டைப்பட்டி சிவராம், காளிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மாணிக்கம்தாகூர் பேசியதாவது:-

100 நாள் வேலை திட்டம், விவசாயத்தை பாதிக்காத வகையில் விவசாயத்துடன் இணைந்த திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமத்தில் ஆண்கள், பெண்களுக்கு மரியாதையான சம்பளம் கிடைப்பதே திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கிராமத்திலேயே பணிபுரிவதால் திட்டமும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த திட்டம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்படுத்தப்படுவதால் வேலை தேடி வேறு இடங்களுக்கு செல்லாமல் உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலை மாநில அரசு தாமதப்படுத்துவதால் மத்திய அரசு நிதியை குறைத்து வருகிறது. ஆகையால், கிராமங்களில் அடிப்படை வசதியை பூர்த்தி செய்ய மாநில அரசால் நிதி வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால்தான் தெரு விளக்கு எரிவது இல்லை, குழாய்களில் தண்ணீர் வருவதில்லை, வாருகாலை சுத்தம் செய்ய முடியவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இனிமேலாவது காலதாமதம் செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை மாநில அரசு நடத்த வேண்டும். இவ்வாறு கூறினார். முடிவில் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Next Story