நகர பகுதியில் கவர்னர் ஆய்வு: தேங்கி கிடக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு


நகர பகுதியில் கவர்னர் ஆய்வு: தேங்கி கிடக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 19 Aug 2019 4:30 AM IST (Updated: 19 Aug 2019 4:22 AM IST)
t-max-icont-min-icon

புதுவை நகர பகுதியில் கவர்னர் கிரண்பெடி நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது தாழ்வான பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதில் தூய்மைக்கும், நிலத்தடி நீர் சேகரிப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று 229-வது வார இறுதி பயணம் மேற்கொண்டார். இதற்காக அவர் கவர்னர் மாளிகையில் இருந்து நேற்று காலை தனது காரில் புறப்பட்டு நகர் பகுதி முழுவதும் சென்றார்.

கடந்த 3 நாட்களாக புதுவையில் பெய்து வரும் தொடர் மழையால் வாய்க்கால்களில் மழைநீர் தேங்கி உள்ளதா? என்று பார்வையிட்டார். தொடர்ந்து ரெயின்போநகர், காமராஜர் நகர், கருவடிக்குப்பம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது சில இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து இருந்தது. இதனை பார்த்த உடன் கவர்னர் கிரண்பெடி, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகளை அழைத்து சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அகற்றும் படி உத்தரவிட்டார்.

அங்கிருந்து புறப்பட்ட அவர் உப்பனாறு வாய்க்காலுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளிடம் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் உப்பனாறு வாய்க்காலை சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தூர்வார வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பின்னர் அவர் கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல் திட்டு பகுதிக்கு சென்றார். அங்கு சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன மாணவர்களின் நீர் சறுக்கு விளையாட்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அதன் பயிற்சியாளரை சந்தித்து, ‘புதுவை மாநிலத்தில் உள்ள மீனவ சிறுவர்களுக்கும் இது போன்ற பயிற்சிகளை வழங்க வேண்டும். அவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்று சாதனை படைக்க உதவ வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு சென்றார்.

Next Story