பஸ் - சுற்றுலா வேன் மோதல், கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் படுகாயம்


பஸ் - சுற்றுலா வேன் மோதல், கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Aug 2019 4:30 AM IST (Updated: 19 Aug 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்த தனியார் பஸ்சும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

பாலக்கோடு,

சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 25 மாணவ-மாணவிகள் பழனி கோவிலுக்கு வேனில் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று அவர்கள் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். பாலக்கோடு பைபாஸ் பிரிவு சாலையில் சென்றபோது ஓசூரில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்த தனியார் பஸ்சும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வேனில் சென்ற மாணவர்கள் மணிகண்டன் (வயது20), மகேந்திரன், சுகன், நிதீன், உதய், விஷ்வன், சாமிநாதன், சிவநாதன் மற்றும் வேன் டிரைவர் ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற மாணவ-மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story