சிவகாசி பஸ் நிலையத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரால் மக்கள் அவதி


சிவகாசி பஸ் நிலையத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 19 Aug 2019 9:45 PM GMT (Updated: 19 Aug 2019 5:23 PM GMT)

சிவகாசி பஸ் நிலையத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

சிவகாசி,

சிவகாசி பஸ் நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது. தினமும் 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன. தினமும் பஸ் நிலையத்துக்கு 8 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து, செல்கின்றனர். இந்த நிலையில் சிவகாசியில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை சிவகாசி நகரில் தொடர்ந்து 2 மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இதற்கிடையில் சிவகாசி பஸ் நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். பஸ் நிலைய விரிவாக்கத்துக்காக கடந்த ஆண்டு பஸ் நிலையத்தில் இருந்த 15-க்கும் மேற்பட்ட கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். பின்னர் அந்த இடத்தில் எவ்வித கட்டிடமும் கட்டப்படாத நிலையில் தற்போது அந்த பகுதி மைதானம் போல் காட்சி அளிக்கிறது.

மழைக் காலங்களில் அந்த இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் பஸ் நிலையத்தை ஆய்வு செய்து மழை தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story