அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட விரும்பவில்லை தஞ்சையில், டி.டி.வி.தினகரன் பேச்சு


அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட விரும்பவில்லை தஞ்சையில், டி.டி.வி.தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 19 Aug 2019 11:15 PM GMT (Updated: 19 Aug 2019 6:43 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட விரும்பவில்லை என தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்ட அ.ம.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் எம்.ரெங்கசாமி, மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் சேகர் வரவேற்றார்.

கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

எந்த துறையாக இருந்தாலும் தஞ்சையை தவிர்த்துவிட்டு எதையும் சிந்திக்க முடியாத, தவிர்க்க முடியாத நிலை உள்ளது. காவிரி டெல்டா பகுதி செழிப்பான பகுதியாக இருந்தது. ஆனால் இன்றைக்கு காவிரி தண்ணீர் வருமா? என தவம் இருந்து கொண்டு இருக்கிறோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் இங்கே இருக்க முடியுமா?. சோமாலியாவை போன்று தமிழகம் ஆகிவிடுமோ? என்ற அச்சம் உள்ளது.

காவிரி டெல்டா மட்டுமின்றி தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வந்து நம்மை கஷ்டப்படுத்துவதே மத்திய, மாநில அரசுகளின் வேலையாக உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகும், தமிழகத்தில் அவர் கொண்டு வந்த ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. ஆனால் அடிமை ஆட்சியாக மாறி இருக்கிறது. தமிழகத்திற்கு எதிராக எதையும் செய்ய மாட்டேன் என்று கூறி, அதன்படி ஆட்சியை நடத்தியவர் ஜெயலலிதா.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள், பதவியில் நீடித்தால் போதும் என மக்களுக்கு எதிரான திட்டத்தை நிறைவேற்றி வருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொடுங்கள் என கோரிக்கையா வைத்தார்கள்?. அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி இருக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்களை சரியாக வைத்து கொண்டால் ஆட்சியை தொடரலாம் என ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை மட்டுமின்றி தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் சரியாக வைத்து கொண்டு இருக்கிறார்கள்.

அதனால் தான் தி.மு.க. தலைவர், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்தாலும் அவர்களது எம்.எல்.ஏ.க்கள் கூட விரும்பவில்லை. அது அவருக்கும் நன்றாக தெரியும். எம்.எல்.ஏ.க்களால் இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. யாரோ சிலர் கட்சியில் இருந்து சுயநலத்திற்காக சென்றதால் தளபதிகள் சென்று விட்டார்கள். தினகரன் அவ்வளவு தான் என்று சொல்கிறார்கள். யார் தளபதிகள்?. எங்கள் கட்சியில் ஆணி வேர்களாக தொண்டர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் கிளைகளை கொண்டு விஸ்வரூபம் எடுத்துள்ளோம்.

விஜயபாஸ்கர், தம்பி துரையை எதிர்த்து போராட முடியாமலும், சொந்த காரணத்தினாலும் ஒருவர் தி.மு.க.விற்கு சென்று எம்.எல்.ஏ.வாகி இருக்கிறார். கொள்கையே இல்லை என்று கூறிவிட்டு சென்றவர், தேர்தலுக்கு முன்பே தி.மு.க.வுக்கு சென்று ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட முயற்சி செய்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்களை எல்லாம் அழைத்து பேசி, ஒருவரை முதல்-அமைச்சராக நியமித்து விட்டு சிறைக்கு சென்ற சசிகலாவுக்கு துரோகம் செய்து விட்டார்கள். நான் நினைத்து இருந்தால் என் சித்தியிடம் சொல்லி பதவி வாங்கி இருக்க முடியாதா?.பதவி என்பது தோளில் போடும் துண்டு போன்றது. கொள்கை என்பது இடுப்பில் கட்டும் வேட்டியை போன்றது. வேட்டி முக்கியம் என்பவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் விசுவாசமாக இருப்பார்கள். அண்ணா, எம்.ஜி.ஆர்., கட்சி தொடங்கியவுடன் ஆட்சிக்கு வரவில்லை. துரோகத்தை முறியடிக்கவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழிநடத்திய இயக்கத்தை மீட்கவும், மக்களின் உரிமையை மீட்டெடுக்கவும் உருவாக்கப்பட்டது தான் அ.ம.மு.க.

நாம் வெற்றி பெறுவோம். இளைஞர்கள், தாய்மார்கள் ஆதரவு நமக்கு உள்ளது. தஞ்சாவூர் பொம்மைபோல் தமிழகத்தில் நடக்கும் பொம்மலாட்ட ஆட்சி முடிவுக்கு வரும். ஆட்சி, அதிகாரம் நம் கைக்கு வரும். யாரிடமும் எதற்காகவும் சமரசம் செய்யாத இயக்கம். சாதி, மத வேறுபாடு கிடையாது. ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் அச்சுறுத்தலாக அ.ம.மு.க. இருக்கிறது. வரும் காலம் நிச்சயம் வெற்றியை அளிக்கும். நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் துணைத் தலைவர் அன்பழகன், தலைமை நிலைய செயலாளர் மனோகரன், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, மாநில வக்கீல் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன், அமைப்பு செயலாளர்கள் தேவதாஸ், பாஸ்கர், ராஜமாணிக்கம், மாநில இளைஞரணி செயலாளர் டேவிட் அண்ணாதுரை, தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் மலர்வேந்தன், பேராசிரியர் பொன்.முருகேசன், மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் தங்கப்பன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக டி.டி.வி.தினகரனுக்கு நிர்வாகிகள் வீரவாள் பரிசாக வழங்கினர். முடிவில் மாவட்ட அவைத் தலைவர் ஜெய ராமன் நன்றி கூறினார்.

Next Story