கூடலூர் அருகே நிலச்சரிவில் சிக்கி மாயமான தொழிலாளி உடல் மீட்பு


கூடலூர் அருகே நிலச்சரிவில் சிக்கி மாயமான தொழிலாளி உடல் மீட்பு
x
தினத்தந்தி 19 Aug 2019 11:00 PM GMT (Updated: 19 Aug 2019 7:13 PM GMT)

கூடலூர் அருகே நிலச்சரிவில் சிக்கி மாயமான தொழிலாளி உடல் மீட்கப்பட்டது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சமீபத்தில் கனமழை பெய்தது. அப்போது சீபுரம், கல்லறைமூலா, எலியாஸ்கடை பிரிவு, கீழ்நாடுகாணி உள்பட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மேலும் நீரிடியும்(பெரிய பள்ளம்) உண்டானது. இதனால் காட்டாற்று வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 8-ந் தேதி கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி எல்லமலையை சேர்ந்த தொழிலாளி சைனூதீன்(வயது 45) என்பவர் தனது நண்பர்கள் சிலருடன் சீபுரம் பகுதியில் மாலை 5 மணிக்கு நடந்து சென்றார்.

அப்போது சாலையின் மேற்புறம் திடீரென நிலச்சரிவு மற்றும் நீரிடி ஏற்பட்டது. இதை கண்ட சைனூதீனின் நண்பர்கள் தப்பி ஓடினர். ஆனால் சைனூதீன் மட்டும் நிலச்சரிவில் சிக்கி மாயமானார். அந்த இடத்தில் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியதால், சைனூதீனை அவரது நண்பர்களால் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் வருவாய்த்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாரால் பல நாட்களாக அவரை தேடும் பணி நடந்தது.

ஆனாலும் சைனூதீனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கடந்த 17-ந் தேதி அவரை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதனிடையே எல்லமலை ஆதிவாசி மக்கள் சிலர் குண்டம்புழா சாட்டங்குன்னு பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்க நேற்று சென்றனர். அப்போது மாலை 4 மணிக்கு மனித உடல் ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் மற்றும் எல்லமலை கிராம மக்களுக்கு ஆதிவாசிகள் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் நியூகோப் போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் கிராம மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டம்புழா ஆற்றுக்கு சென்றனர்.

அப்போது அது நிலச்சரிவில் சிக்கி மாயமான சைனூதீன் உடல் என அடையாளம் காணப்பட்டது. பின்னர் உடலை மீட்டு அடர்ந்த வனப்பகுதி வழியாக தொட்டில் கட்டி தூக்கி வந்தனர். பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட 12 நாட்களுக்கு பிறகு, அதில் சிக்கி உயிரிழந்த தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story