பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்


பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்
x
தினத்தந்தி 20 Aug 2019 4:30 AM IST (Updated: 20 Aug 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக்கொண்ட நிஷா பார்த்திபன் தெரிவித்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்த திஷாமித்தல் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், சி.பி.சி.ஐ.டி. (111) பணியாற்றிய நிஷா பார்த்திபன் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து நிஷா பார்த்திபன் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நேற்று மாலை தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று கொண்ட நிஷா பார்த்திபனை போலீசார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பின் போது பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் நிருபர்களிடம் கூறியதாவது:- பெரம்பலூர் மாவட்டத்தின் மையத்திலேயே மிக நீண்ட தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதனால் அந்த சாலை போக்குவரத்தில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கும், முதற்கட்டமாக சாலை போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு போலீசார் மூலம் ஏற்படுத்தப்படும். விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகும் சாலை போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான இடங்களில் கூடுதலாக புதிதாக கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். பெரம்பலூர் நகரில் ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்து விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக தெரியவருகிறது. முதற்கட்டமாக ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதன்பிறகும் விதிமீறல்களில் ஈடுபடும் ஷேர் ஆட்டோக்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கு இரவு நேரத்தில் போலீசார் அதிகளவில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும். பெரம்பலூர் மாவட்டத்தின் சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்ற சம்பவங்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக போலீசாரால் மேற்கொள்ளப்படும். நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story