‘எலி பேஸ்டுக்கு’ தடை விதிக்க பரிந்துரைக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


‘எலி பேஸ்டுக்கு’ தடை விதிக்க பரிந்துரைக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 20 Aug 2019 4:45 AM IST (Updated: 20 Aug 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

‘எலி பேஸ்டுக்கு’ தடை விதிக்க தமிழக அரசிடம் சுகாதாரத்துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை கருவிகள் தொடக்க விழா, மருந்து நிறுவனங்களுக்கு பதிவு சான்றிதழ்கள் வழங்கும் விழா, மனநல திட்டத்தின் சார்பில் மனநல வியாழன் திட்ட தொடக்க விழா மற்றும் உலக மக்கள் தொகை தின விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், புதுக்கோட்டையில் பழைய அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வந்த அவசர சிகிச்சை பிரிவு, பொது நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு உயர்தர மருத்துவ சிகிச்சை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட 50 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவுடன் கூடிய ஆயுஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. தமிழக சுகாதாரத்துறை உடல் உறுப்புகள் தானத்திற்கு முன்னுரிமை அளித்து வருவதை போல, மனநல திட்டத்திற்கும் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது.

மனிதர்களுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை தடுக்கும் வகையில், தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், அதனால் பல்வேறு விளைவுகள் ஏற்படும். எனவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மனநல மையத்தின் மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திருமயம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மையத்தினை திறந்து வைத்தார். இதில் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் சந்திரசேகரன், மாவட்ட மனநல மருத்துவர் கார்த்தி தெய்வநாயகம், குடும்பநல துணை இயக்குனர் மலர்விழி, அடையார் புற்றுநோய் மருத்துவமனை துணைத்தலைவர் ஹேமந்ராஜ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ள டயாலிசிஸ் மையத்தினை திறந்து வைத்து, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிக்கு விலையில்லா காதொலி கருவிகள் வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்பவர்கள் 2 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்ந்து உள்ளது. தற்கொலை செய்து கொள்பவர்கள் ‘எலி பேஸ்ட்’ சாப்பிட்டு அதிகமானோர் தற்கொலை செய்து கொள்வதால், அவர்களை உயிர் பிழைக்க வைப்பது மருத்துவர்களுக்கு சவாலாக உள்ளது. எலி பேஸ்டில் கொடிய விஷத்தன்மை உள்ளது. எலி பேஸ்டுக்கு தடை விதிப்பது அனைத்து துறையும் சார்ந்தது. இதனால் எலி பேஸ்டுக்கு தடை விதிக்க தமிழக அரசிடம் சுகாதாரத்துறை சார்பில் பரிந்துரைக்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குடிநீர் பிரச்சினை கிடையாது. இதனால் டயாலிசிஸ் செய்வதில் எந்தவிதமான சிரமமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story