அமராவதி ஆற்று உபரிநீரை வெள்ளியணை பெரியகுளத்தில் நிரப்ப வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


அமராவதி ஆற்று உபரிநீரை வெள்ளியணை பெரியகுளத்தில் நிரப்ப வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 20 Aug 2019 4:30 AM IST (Updated: 20 Aug 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அமராவதி ஆற்று உபரிநீரை வெள்ளியணை பெரியகுளத்தில் நிரப்ப வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அன்பழகனிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, முதியோர் உதவித்தொகை உள்பட 408 மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில், கரூர் நகராட்சி காந்தி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்களது பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு சாலைகள் குண்டும்- குழியுமாக காணப்படுகிறது. எனவே சாலை வசதி ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

கரூர் பா.ஜ.க. நிர்வாகிகள் அளித்த மனுவில், கரூரில் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. எனவே விவசாய சாகுபடி பரப்பளவு குறைவதை தடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் செங்கல் சூலை உள்ளிட்டவற்றுக்கு விவசாய விளைநிலங்களில் இருந்து மண் எடுக்கப்படுவதை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

பொன்னணியாறு அணை தூர்வாரப்படுமா?

கடவூர் தாலுகா இடையப்பட்டி மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கடவூரில் உள்ள பொன்னணியாறு அணை முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. எனவே அணையை தூர் வாரிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பின்னர் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில், ஊரின் வளர்ச்சி பற்றிய கேள்விகளை இளைஞர்கள் கேட்டதால் சிலர் அவர்களை மிரட்டுகின்றனர். எனவே இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

குளித்தலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக ஆக்கப்பட்டும் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகள் வெளியிடங்களுக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்படும் நிலை உள்ளது. எனவே மருத்துவ மனைக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கி, மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்கிட வேண்டும். குளித்தலை பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என விருச்சம் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர்.

குளித்தலை வட்டம் தமிழர் கழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வினோத்குமார் உள்ளிட்டோர் அளித்த மனுவில், குளித்தலை வட்டம் இனுங்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறை கட்டிடம் நீண்ட நாட்களாகியும் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மாயனூர் வாய்க்காலை தூர்வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

பஞ்சப்பட்டி ஏரி

கடவூர் வட்டம் விரிட்டி கவுண்டனூரை சேர்ந்த சுரேஷ் அளித்த மனுவில், கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த எனது மகன் தினேஷ்குமார் கடந்த 2018-ல் அங்குள்ள தோட்ட கிணற்றில் டிபன் பாக்சை கழுவ சென்றபோது தவறி விழுந்து இறந்தான். எங்களது குடும்பம் வறுமையில் வாடுகிறது. எனவே எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். டாக்டர் அம்பேத்கார் மக்கள் நலசங்கம் சார்பில் அளித்த மனுவில், கரூர் நகராட்சியின் பின்புறத்தில் சில தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தநிலையில் சில காரணங்களால் சில கடைகளை அங்கிருந்து அகற்றிவிட்டனர். எனவே அவர்களுக்கு மீண்டும் செருப்பு தைத்து பிழைப்பு நடத்திட உரிய இடம் வழங்கிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

குளித்தலை தி.மு.க. எம்.எல்.ஏ. ராமர் அளித்த மனுவில், கல்லடை ஊராட்சி மேலவெளியூரில் தடுப்பணை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாயனூர் காவிரியாற்றில் இருந்து பஞ்சப்பட்டி ஏரிக்கு நீர் நிரப்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

வெள்ளியணை பெரியகுளம்

சாமானிய மக்கள் நலக்கட்சி சண்முகம் உள்ளிட்டோர் அளித்த மனுவில், புலியூரில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள டாஸ்மாக் கடையை ஊருக்கு ஒதுக்குப் புறமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பால் சூழப்பட்டுள்ள தாந்தோன்றிமலை ராஜவாய்க் காலில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். கரூர் பாராளுமன்ற தொகுதி வேடசந்தூர் வட்டம் லந்தைகோட்டை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதி மக்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக வெள்ளியணை பெரியகுளம் உள்ளது. ஆனால் இந்த குளம் சரிவர பராமரிக்கப்படாததால் கடந்த 20 ஆண்டுகளாக தூர்ந்து போய் உள்ளது. எனவே கரூர் அமராவதி ஆற்றில் மழைக்காலங்களில் உபரியாக சென்று கடலில் கலக்கும் நீரினை வாய்க்கால் மூலம் கொண்டு வந்து வெள்ளியணை பெரிய குளத்தை நிரப்பிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் அன்பழகன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

நிவாரண நிதி

இந்த நிகழ்ச்சியில் மண்மங்கலம் வட்டம் நன்னியூர் ராமசாமி மகன் லட்சுமிகாந்தன் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி அன்று திருச்சி மாவட்டம் முத்தையம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள கருப்புக்கோவில் பிடிகாசு திருவிழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததால் அவரின் மனைவி தனலெட்சுமிக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், சமூக பாதுகப்பு திட்ட தனிதுணை கலெக்டர் சரவணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அதிகாரி மல்லிகா, உதவி ஆணையர் (கலால்) மீனாட்சி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் பிரபு உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story