வைகை அணையில் குதித்து தற்கொலைக்கு முயன்ற டிரைவர் - மருத்துவமனையில் சிகிச்சை


வைகை அணையில் குதித்து தற்கொலைக்கு முயன்ற டிரைவர் - மருத்துவமனையில் சிகிச்சை
x
தினத்தந்தி 20 Aug 2019 4:30 AM IST (Updated: 20 Aug 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

காதலியிடம் திருமணம் செய்யும்படி கேட்டு, வைகை அணையில் குதித்து டிரைவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பையை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் விஜய் (வயது 24). இவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தேனியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த மே மாதம் பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு காதலித்த பெண்ணுடன், விஜய் வைகை அணைக்கு வந்தார். அங்கு நீர் தேக்கப்பகுதி அருகே அந்த பெண்ணுடன் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது விஜய், அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அந்த பெண் பதில் கூற தாமதித்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜய் திடீரென்று வைகை அணையில் குதித்தார்.

இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனே காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அந்த பெண் கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நீரில் குதித்து விஜயை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வைகை அணை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வைகை அணை போலீசார் மற்றும் ஆண்டிப்பட்டி தீயணைப்புத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மழை பெய்ததாலும், இரவு நேரமாகியதாலும் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் தேடுதல் பணி தொடர்ந்தது.

இதற்கிடையே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விஜய் சிகிச்சை பெற்று வருவதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தண்ணீரில் குதித்த பின் சிறிது நேரத்தில் நீந்தி மேலே ஏறி வந்ததாகவும், இரவு நேரமாக இருந்ததால் வைகை அணை அருகே உள்ள மாந்தோப்பில் சென்று தங்கி விட்டு, காலையில் மருத்துவமனையில் சேர்ந்ததாகவும் விஜய் கூறினார். அவரிடம் தற்கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளக்கூடாது என்று போலீசார் அறிவுரை கூறி விட்டு சென்றனர்.

Next Story