ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது - கலெக்டர் அறிவிப்பு
ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகளான கடல், ஆறு மற்றும் குளம் ஆகியவை நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போதும், விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கும், ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக தாமரை குளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராபதி, பூமா செட்டி குளம், போளூர் ஏரி, கூர் ஏரி ஆகிய நீர் நிலைகள் கண்டறியப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச் சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story